அருந்ததியர் ஒதுக்கீடு விவகாரத்தில் திடீர் மோதல் திருமா மீது முருகன் புகார்; பா.ஜ.,வுக்கு தி.மு.க., கேள்வி
அருந்ததியர் ஒதுக்கீடு விவகாரத்தில் திடீர் மோதல் திருமா மீது முருகன் புகார்; பா.ஜ.,வுக்கு தி.மு.க., கேள்வி
ADDED : அக் 22, 2024 06:33 AM
'தி.மு.க., கூட்டணியில் ஆறு சட்டசபை தொகுதிகள் பெற்ற திருமாவளவன், ஒன்றையாவது அருந்ததியருக்கு கொடுத்தாரா? அவருக்கு அருந்ததியர் பற்றி பேச தகுதியில்லை,'' என, மத்திய அமைச்சர் முருகன் கூறியதை தொடர்ந்து, இந்த விவகாரம் சூட்டை கிளப்பி உள்ளது.
சென்னையில் நேற்று மத்திய இணை அமைச்சர் முருகன் அளித்த பேட்டி:
அருந்ததியருக்கு உள் இடஒதுக்கீடு ஏன் வழங்க வேண்டும் என்பதற்கான தகவல்களை கொடுத்தவன் நான். அனைத்து தரப்பு மக்களுக்கும் இட ஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என்பதே எங்கள் கொள்கை. வி.சி., தலைவர் திருமாவளவன், அவருடைய கட்சி சார்பாக போட்டியிட, அருந்ததியருக்கு எப்போதாவது வாய்ப்பு கொடுத்துள்ளாரா? அவர் அருந்ததியர் பற்றி பேச தகுதியில்லாதவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
'அருந்ததியினருக்கு எதிராக எங்களை திசை திருப்ப முயற்சி'
மத்திய அமைச்சர் முருகன் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:
பல்வேறு பட்டியலின சமூகங்களை, உச்ச நீதிமன்றம் பிரிக்கச் சொல்கிறது. மாநிலத்திற்கு அந்த உரிமை வழங்குகிறது. இது, அம்பேத்கர் கொள்கைக்கு எதிரானது. எனவே, விடுதலை சிறுத்தைகள் கட்சி அதை எதிர்க்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சீராய்வு மனுவில், அருந்ததியருக்கு எதிராக ஒரு வார்த்தை குறிப்பிடவில்லை. தீர்ப்பில் தெளிவு தேவை என்று தான் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளோம். ஆனால், எங்களை குறிவைத்து அவதுாறு பரப்புகின்றனர். வி.சி.,க்களை அருந்ததியருக்கு எதிராக திருப்பும் பா.ஜ., முயற்சியை, அருந்ததியர் சமூகமே ஏற்றுக்கொள்ளாது.
இவ்வாறு அவர் கூறினார்.
முருகனுக்கு பிரதமர் பதவி பா.ஜ., தலைமை தருமா?
இவ்விவகாரத்தில், திருமாவளவனுக்கு ஆதரவாக தி.மு.க., குரல் கொடுத்துள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி:
தி.மு.க., கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில், ஒன்றில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்; மற்றொன்றில் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்தவர் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளன. தலித் சமுதாயத்தினர் போட்டியிட நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அருந்ததியர் சமுதாயத்தினருக்கு தி.மு.க., கூட்டணியில் மதிவேந்தனுக்கு ஒதுக்கப்பட்டு, அவர் அமைச்சராகவும் உள்ளார். அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த முருகனுக்கு, பிரதமர் பதவியை பா.ஜ., வழங்குமா?
இவ்வாறு அவர் கூறினார்
. - நமது நிருபர் -