இசைக்கலைஞர் ஸ்ரீராம்குமாருக்கு சங்கீத கலாநிதி விருது அறிவிப்பு
இசைக்கலைஞர் ஸ்ரீராம்குமாருக்கு சங்கீத கலாநிதி விருது அறிவிப்பு
ADDED : மார் 25, 2025 04:18 AM

சென்னை: வயலின் இசைக்கலைஞர் ஆர்.கே.ஸ்ரீராம்குமாருக்கு, சென்னை மியூசிக் அகாடமியின், 'சங்கீத கலாநிதி விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மியூசிக்அகாடமி தலைவர் முரளி வெளியிட்டுள்ள அறிக்கை:
மியூசிக் அகாடமி செயற்குழு கூட்டம், கடந்த, 23ம் தேதி நடந்தது. இதில், மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி, ந்ருதிய கலாநிதி உள்ளிட்ட விருதுகளுக்கான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
வயலின் கலைஞர் ஆர்.கே.ஸ்ரீராம்குமாருக்கு, சங்கீத கலாநிதி விருது; பாடகி ஷ்யாமளா வெங்கடேஷ்வரன் மற்றும் தவில் வித்வான் தஞ்சாவூர் ஆர்.கோவிந்தராஜன் ஆகியோருக்கு, சங்கீத கலா ஆச்சார்யா விருது; கதகளி இசைக்கலைஞர் மாதம்பி சுப்பிரமணிய நம்பூதிரி, வீணை இசைக் கலைஞர் கள் ஜெயராஜ் கிருஷ்ணன், ஜெயஸ்ரீ ஜெயராஜ் கிருஷ்ணன் ஆகியோருக்கு, டி.டி.கே விருது; இசைப்பேராசிரியை ஸ்ரீதராவுக்கு இசையமைப்பாளருக்கான விருது; நடன கலைஞர் ஊர்மிளா சத்யநாராயணாவுக்கு, ந்ருத்ய கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வாகி உள்ள ஆர்.கே.ஸ்ரீராம்குமார், கர்நாடகா மாநிலம் ருத்ரபட்டிணம், இசை பாரம்பரியத்தை சேர்ந்தவர்.
தன் தாத்தா வெங்கடராமா சாஸ்திரி மற்றும் டி.கே.ஜெயராமனிடம் வயலின் இசை கற்று, புகழ்பெற்ற பாடகர்களான செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர், டி.பிருந்தா, எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள் உள்ளிட்டோருடனும், தற்கால பாடகர்களுடனும் இணைந்து, பக்க வாத்தியம் வாசித்த அனுபவம் உள்ளவர்.
இவர், பல ஆண்டுகளாக மாணவர்களுக்கு புரியும் வகையில், கர்நாடக சங்கீத நுணுக்கங்களை இசைத்து, விளக்கும் பாணி புகழ் பெற்றது.
இந்த ஆண்டு டிச., 15 முதல் அடுத்த ஆண்டு ஜன., 1 வரை நடக்க உள்ள, மியூசிக் அகாடமியின், 99வது ஆண்டு மாநாடு மற்றும் கருத்தரங்க நிகழ்வுகளுக்கு, சங்கீத கலாநிதி விருதாளர் தலைமை ஏற்பார்.
அந்நிகழ்வில் அவருக்குவிருது வழங்கப்படும். ஜன., 1ல் நடக்கும் நிகழ்வில் மற்ற விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். மியூசிக் அகாடமியின் 19வது ஆண்டு நாட்டிய விழா துவக்க நாளான ஜன., 3ல், ந்ருத்ய கலாநிதி விருது வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.