வைகோவின் மனிதநேயத்துக்கு முன் எனது கோபம் பணிந்துவிட்டது: துரை
வைகோவின் மனிதநேயத்துக்கு முன் எனது கோபம் பணிந்துவிட்டது: துரை
ADDED : ஏப் 22, 2025 10:47 PM
திருச்சி:''ம.தி.மு.க.,வில் நிலவிய பிரச்னைகளால் ஏற்பட்ட கோபம், வைகோவின் மனிதநேயத்திற்கு முன் அடிபணிந்து விட்டது,'' என, திருச்சி எம்.பி., துரை வைகோ தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில், எம்.பி., துரை வைகோ அளித்த பேட்டி:
கவர்னர் இது நாள் வரை தன்னிச்சையாக செயல்பட்டு வந்தார். அதற்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. அதனால், இனியாவது கவர்னர், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து செயல்பட வேண்டும்; தீர்ப்பை எல்லோரும் ஏற்க வேண்டுமே தவிர, அதை விமர்சிக்கத் தேவையில்லை.
ம.தி.மு.க.,வில் நிலவிய பிரச்னைகள் தற்காலிகமானதுதான். இருந்தாலும், அது தொடர்பான கோபம் இருந்தது. ஆனால், வைகோவின் மனிதநேயத்திற்கு முன், அந்த கோபம் அடிபணிந்து விட்டது. தமிழக நலனுக்காக தொடர்ந்து செயல்படுவதே, என்னுடைய ஒரே நோக்கம்.
நான் வெளிப்படையாக பேசுபவன். அதனால் தான், தவறுகள் கண்டதும் பொங்குகிறேன்.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தமிழகத்துக்கு மட்டுமல்ல நாட்டுக்கே கூட நல்லதல்ல. பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததை, அ.தி.மு.க., தலைவர்களும், தொண்டர்களும் விரும்ப வில்லை. கட்சியில் இருப்போர் யாருக்குமே விருப்பமில்லாமல் ஒரு கூட்டணியை உருவாக்கி இருக்கிறார் பழனிசாமி. அதே போலத்தான், அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை பா.ஜ.,வினரும் விரும்பவில்லை. இப்படி இரு கட்சியினரும் விரும்பாத ஒரு கூட்டணியை கட்சித் தலைவர்கள் ஏற்படுத்தி உள்ளனர். அதனால், அந்தக் கூட்டணி தேர்தலில் வெற்றி பெறுவது ரொம்ப ரொம்ப சிரமம்.
இவ்வாறு அவர் கூறினார்.

