ADDED : அக் 25, 2024 09:48 PM
எடப்பாடி,:''என்னை ஜோசியர் என ஸ்டாலின் கூறுகிறார். என் ஜோசியம் நிச்சயம் பலிக்கும். 2026ல், அ.தி.மு.க., நிச்சயம் ஆட்சிக்கு வரும்,'' என, பழனிசாமி பேசினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில், ஒன்றிய, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் பங்கேற்று அக்கட்சி பொதுச்செயலர், பழனிசாமி பேசியதாவது:
இந்தியாவில் அதிக லஞ்சம் வாங்கும் ஆட்சியாக, தி.மு.க., ஆட்சி உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது, அ.தி.மு.க., குறைந்த ஓட்டுகள் வாங்கியதாக தெரிவித்தார். எதுவும் தெரியாமல் பேசக்கூடாது. கடந்த சட்டசபை தேர்தலை விட, அ.தி.மு.க., 1 சதவீதம் கூடுதல் ஓட்டுகளை பெற்றுள்ளன. 2019 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., ஓட்டு, 19.35 சதவீதம். 2024 லோக்சபா தேர்தலில், 20.35 சதவீதமாக உள்ளது.
அதேபோல், தி.மு.க., ஓட்டு, 2019 தேர்தலில், 33.9 சதவீதம். 2024 தேர்தலில், 26.50. கிட்டத்தட்ட, 7 சதவீத ஓட்டுகள், தி.மு.க., குறைவாக பெற்றுள்ளன. இதை வைத்து மக்களுக்கு யார் மீது செல்வாக்கு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
என்னை ஜோசியர் என ஸ்டாலின் கூறுகிறார். என் ஜோசியம் நிச்சயம் பலிக்கும். 2026ல், அ.தி.மு.க., நிச்சயம் ஆட்சிக்கு வரும். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
திறமைமிக்க அரசாக இருந்த, அ.தி.மு.க., ஆட்சியில், எதுவும் செய்யவில்லை என ஸ்டாலின் பச்சைப்பொய் பேசுகிறார்.
ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஊர் ஊராக சென்று மக்களிடம் மனுக்கள் வாங்கி எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது சேலம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நாடகம் போட்டு வருகிறார். கும்பகர்ணன் போல் துாங்கிவிட்டு இப்போது மக்களிடம் மனு வாங்கி வருகிறார்கள். அத்தனையும் வெளி வேஷம்.
அ.தி.மு.க., தந்த அழுத்தத்தாலேயே மகளிர் உரிமைத்தொகையை இந்த அரசு வழங்கி வருகிறது. தமிழகத்தில் பஸ்கள் ஓட்டை உடைசல்களாக உள்ளன. 2026 தேர்தலில் அற்புதமான, பலமான கூட்டணி அமையும். அ.தி.மு.க., ஆட்சியே பாதுகாப்பான, பெண்களுக்கான ஆட்சி.
இவ்வாறு அவர் பேசினார்.