கடலில் உயிருக்கு போராடிய மியான்மர் மீனவர்கள் மீட்பு
கடலில் உயிருக்கு போராடிய மியான்மர் மீனவர்கள் மீட்பு
ADDED : டிச 08, 2024 07:27 AM

நாகப்பட்டினம்: நாகை, அக்கரைப்பேட்டையை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்றனர்.
நேற்று முன்தினம் நாகையில் இருந்து நேர்கிழக்கில், 41 கடல் மைல் தொலைவில், மூங்கிலால் வடிவமைக்கப்பட்ட தெப்பம் போன்ற படகு ஒன்று மிதந்து கொண்டிருப்பதை பார்த்தனர்.
அருகில் சென்று பார்த்தபோது அதில், நான்கு பேர் பசியுடன் உயிருக்கு போராடி கொண்டிருப்பது தெரிந்தது.
மியான்மர் நாட்டின் கொடியை காட்டி அவர்கள் உதவி கோரினர். இதனால், அவர்கள் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது மீனவர்களுக்கு தெரிந்தது.
நாகை மீனவர்கள் தங்கள் படகில் இருந்த உணவுப் பொருட்களை அவர்களுக்கு வழங்கி, இந்திய கடலோர காவல்படையினருக்கு, 'வாக்கி டாக்கி' வாயிலாக தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த இந்திய கடலோர காவல் படையினர், தத்தளித்த மியான்மர் மீனவர்களை மீட்டு, அவர்களின் மூங்கில் படகுடன் நேற்று நாகை அழைத்து வந்தனர்.
விசாரணையில், மியான்மர் நாட்டைச் சேர்ந்த அவர்கள், காற்றின் போக்கில் பயணித்து, தமிழக கடல் பகுதிக்குள் வந்தது தெரியவந்தது.
அதையடுத்து நாகை, கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம், நான்கு மீனவர்களும் ஒப்படைக்கப்பட்டனர்.