வனத்துறையினர் அழைத்து சென்ற வாலிபர் மர்ம மரணம்: வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
வனத்துறையினர் அழைத்து சென்ற வாலிபர் மர்ம மரணம்: வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
ADDED : ஏப் 08, 2025 04:29 AM

சென்னை : வனத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர், மார்பில் குண்டு பாய்ந்து காட்டுப்பகுதியில் இறந்து கிடந்தது தொடர்பான இரண்டு வழக்குகளை, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே, நெருப்பூர் வனப்பகுதியில் கடந்த மாதம் 1ம் தேதி, யானை ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டு, உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. அதன் இரண்டு தந்தங்களும் வெட்டி எடுக்கப்பட்டு இருந்தன. இது தொடர்பாக, வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, தர்மபுரி மாவட்டம் கொங்கரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில், 28, என்பவரை, 17ம் தேதி கைது செய்தனர்.
விசாரணைக்காக அவரை, யானை சுட்டுக் கொல்லப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்றபோது, வனத்துறை அதிகாரிகளை தாக்கிவிட்டு, அவர் கைவிலங்குடன் தப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, பென்னாகரம் கோட்ட வனத்துறை அதிகாரி, தர்மபுரி மாவட்டம் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி, கொங்கரப்பட்டி கிராமம் அருகேயுள்ள சரக்காடு வனப்பகுதியில், செந்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தது; கைவிலங்கும் இல்லை. சடலத்தின் மேலே துப்பாக்கி ஒன்றும் கிடந்தது. இதனால், வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்று, செந்திலை சுட்டுக் கொன்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, அவரது மனைவி சித்ரா, தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார்.
செந்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து, சுஞ்சல்நத்தம் வி.ஏ.ஓ., ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், வனத்துறை அதிகாரிகளை தாக்கிவிட்டு, செந்தில் தப்பிச் சென்றதாக பதிவான வழக்கு மற்றும் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பான வழக்கு போன்றவற்றை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டார்.