எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சுற்றிவளைப்பு: நாகை, தொண்டி மீனவர்கள் 35 பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சுற்றிவளைப்பு: நாகை, தொண்டி மீனவர்கள் 35 பேர் கைது
ADDED : நவ 04, 2025 01:54 AM

திருவாடானை:  ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையைச் சேர்ந்த 4 மீனவர்களையும், நாகை மாவட்ட மீனவர்கள் 31 பேரையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிப்பது தொடர்ந்து நடக்கிறது. மீனவர்களின் விசைப் படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர். தொண்டி அருகே நம்புதாளையைச் சேர்ந்த ரமேஷ் விசைப்படகில் அதே கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் 42, பாலமுருகன் 30, தினேஷ் 18, ராமு 22, ஆகிய மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றனர்.
நேற்று முன்தினம் மதியம் 1:00 மணிக்கு மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது ரோந்து சென்ற இலங்கை கடற்படை யினர் இலங்கை எல்லைக்குள் மீன் பிடித்ததாகக் கூறி 4 பேரையும் கைது செய்தனர். அவர்களின் விசைப்படகையும் பறிமுதல்           செய்தனர்.
நாகை மீனவர்கள் 31 பேர் கைது
இதே போல் நேற்று முன்தினம் நாகை கடற்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இலங்கை நெடுந்தீவு அருகே பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து சென்ற இலங்கை கடற்படை வீரர்கள் 3 விசைப்படகுகளை மடக்கி அதில் இருந்த 31 மீனவர்களை கைது செய்தனர். இவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். பின் மீனவர்கள் 35 பேரையும் யாழ்ப்பாணம் மீன்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிந்து போலீசார் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
ஒரே நாளில் 4 படகுகளை சிறை பிடித்து 35 மீனவர்களை கைது செய்த சம்பவம் தமிழக மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

