உளுந்துார்பேட்டை- சிறுவாச்சூர் இடையே தடைபட்ட பாலம் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க 'நகாய்' திட்டம்
உளுந்துார்பேட்டை- சிறுவாச்சூர் இடையே தடைபட்ட பாலம் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க 'நகாய்' திட்டம்
ADDED : மார் 05, 2024 04:41 AM

விக்கிரவாண்டி: உளுந்துார்பேட்டை - திருச்சி இடையே வாகன விபத்துகளைத் தவிர்க்க துவங்கப்பட்ட 6 மேம்பால பணிகளில் 2 மட்டுமே முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 4 பாலம் பணிகளை, வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க 'நகாய்' திட்டமிட்டு பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை முதல் திருச்சி வரையிலான 137 கி.மீ., துார நான்கு வழிச்சாலையில் வாகன விபத்துகள் நடைபெறும் இடங்களை கண்டறிய, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) ஆய்வு செய்தது.
அதன்படி, உளுந்துார்பேட்டை- சிறுவாச்சூர் இடையே 76 கி.மீ., துார சாலையில் விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை சாரதா ஆசிரமம் அருகில், பாலி, ஆசனுார், கடலுார் மாவட்டம் வேப்பூர், ஆவட்டி, பெரம்பலுார் மாவட்டம் சிறுவாச்சூர் ஆகிய 6 இடங்கள் கண்டறியப்பட்டன. அந்த இடங்களில், விபத்துகளைத் தவிர்க்க 'அண்டர் பாஸ்' என்கிற சுரங்கப்பாதை பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொண்டது.
ரூ.68 கோடியில் 6 பாலங்கள்
இதற்காக கடந்த 2019ம் ஆண்டு, 68 கோடியே 7 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீடு செய்து நிதி ஒதுக்கப்பட்டது.
இப்பணியை டெண்டர் எடுத்த திருச்சி டோல் வே பிரைவேட் லிமிடெட் (டி.டி.பி.எல்.,) நிறுவனம், துணை ஒப்பந்ததாரர்கள் மூலம் பணிகளை துவங்கியது.
அப்போது, கொரோனா தொற்று பரவியதால் பணி கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு மழை மற்றும் மண் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பணிகள் தடைபட்டது.
இருப்பினும் பாலி, சிறுவாச்சூர் ஆகிய 2 பாலங்கள் கட்டுமான பணி முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த மூன்று மாதங்களாக வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
ஆசனுார் பாலம்
கிடப்பில் போடப்பட்ட 4 பாலப் பணிகளில் ஆசனுாரில் கடந்த 4 மாதங்களுக்கு முன் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. மண் கொட்டி சாலை அமைக்க அருகில் உள்ள ஏரிகளில் அரசு அனுமதி பெற்று மண் மாதிரி சேகரித்து ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் மண் கொட்டும் பணி துவங்கி, 4 மாதத்திற்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வேப்பூர் பாலம்
கடலுார் மாவட்டம், வேப்பூரில் திட்டமிட்டபடி மேம்பாலம் பணி துவங்கி நடந்தபோது, பாலத்தின் உயரத்தை 4 மீட்டரிலிருந்து 5 மீட்டராக உயர்த்தி அமைக்க வேண்டி பொதுமக்கள் கடந்த 2022ம் ஆண்டு முதல் போராட்டம் நடத்தினர்.
இதனால் நின்ற பணியை துவக்க, கடந்த 15ம் தேதி கடலுார் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின்பேரில் வேப்பூர் தாலுகா அலுவலகத்தில் 'நகாய்' அதிகாரிகள் முன்னிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், நகாய் ஏற்கனவே திட்டமிட்டபடி 4 மீட்டர் உயரத்திலேயே மேம்பால பணியை முடிக்க சம்மதம் தெரிவித்த பொதுமக்கள், பணியை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்தனர். அதனையொட்டி தற்போது பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
ஆவட்டி பாலம்
கடலுார் மாவட்டம், திட்டக்குடி தாலுகா ஆவட்டி கூட்ரோட்டில் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கி, கொரோனா பரவல், மண் தட்டுப்பாடு காரணங்களால் தடைபட்ட மேம்பால பணி கடந்த அக்டோபர் மாதம் முதல் மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது.
உளுந்துார்பேட்டை பாலம்
உளுந்துார்பேட்டை சாரதா ஆசிரமம் பள்ளி எதிரே கடந்த 2019ம் ஆண்டு பாலம் கட்டுமான பணிக்காக சாலையில் இருபுறமும் தடுப்பு சுவர் கட்டி, கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால், இப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சாலையை கடந்து செல்ல முடியாமல் தினம், தினம் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க பாலப்பணியை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திருச்சி நகாய் திட்ட அமலாக்க பிரிவு இயக்குனர் பிரவீன்குமார், மேலாளர் ராகுல் ஆகியோர் பாலப் பணிகள் தடைபட்டுள்ள இடங்களை பார்வையிட்டு, பணிகளை வரும் செப்டம்பர் மாத இறுதிக்கள் விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

