தே.ஜ., கூட்டணியில் இருந்து அ.ம.மு.க., விலக நாகேந்திரனே காரணம்: தினகரன் குற்றச்சாட்டு ஆத்திரத்தில் பொங்கிய தினகரன்
தே.ஜ., கூட்டணியில் இருந்து அ.ம.மு.க., விலக நாகேந்திரனே காரணம்: தினகரன் குற்றச்சாட்டு ஆத்திரத்தில் பொங்கிய தினகரன்
ADDED : செப் 08, 2025 02:28 AM

மானாமதுரை: “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியேறுவதற்கு, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் செயல்பாடுகளும், அவரது மனநிலையும் தான் முக்கிய காரணம்,” என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தெரிவித்தார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
தமிழக பா.ஜ., தலைவராக நாகேந்திரன் பொறுப்பேற்றதிலிருந்து, கூட்டணியை அவர் பக்குவமாக நடத்திச் செல்லவில்லை. கூட்டணியில் இருந்து வெளியேறுங்கள் என, அ.ம.மு.க., தொண்டர்களும், நிர்வாகிகளும் எனக்கு அழுத்தம் கொடுத்தனர்.
அதற்கு காரணமே, நாகேந்திரனின் செயல்பாடுகளும், அவருடைய மோசமான மனநிலையும் தான். 'செலெக்ட்டிவ் அம்னீசியா' எனும் ஞாபக மறதி, துாக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கும் மனிதர் எப்படி செயல்படுவாரோ, அப்படி செயல்படுகிறார் நாகேந்திரன்.
பூலித்தேவன் நினைவிடத்தில் பேசிய நாகேந்திரன், 'பழனிசாமி தான் கூட்டணியின் தலைவர்; அவர் எடுக்கும் முடிவுகள் தான், எங்கள் முடிவு' என்று பேசியுள்ளார்.
கூடவே, 'தே.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான்' என்றும் சொல்லி இருக்கிறார். அதன்பின்பும், அந்த கூட்டணியில் அ.ம.மு.க., எப்படி இருக்க முடியும்?
பழனிசாமியின் துரோகத்தை எதிர்த்து துவங்கப்பட்ட கட்சிதான் அ.ம.மு.க., அப்படியிருக்கும்போது, துரோகத்தையெல்லாம் மறந்துவிட்டு, பழனிசாமியை முதல்வராக்க நாங்கள் என்ன பைத்தியங்களா?
கூட்டணியில் இருந்து அ.ம.மு.க., வெளியேற வேண்டும் என திட்டமிட்டு, நாகேந்திரன் செயல்பட்டிருப்பது எங்களுக்கு தெரிய வந்துள்ளது.
நாகேந்திரன், தமிழக பா.ஜ.,வுக்கு நல்லது செய்வது போல் தெரியவில்லை.
நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறுவது என முடிவெடுத்த சூழ்நிலையில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, என்னிடம் பேசினார். 'அவசரப்பட வேண்டாம்; கூட்டணியில் இருந்து வெளியேறக்கூடாது. நான் ஏற்படுத்திய கூட்டணி அது' என்று கேட்டுக்கொண்டார்.
'பழனிசாமியை முதல்வராக்குவதற்கு, கூட்டணி அமைத்து நாங்கள் பாடுபட வேண்டுமா. எங்கள் கட்சியை அழித்துக் கொண்டு பழனிசாமியை முதல்வராக்குவது, தற்கொலைக்கு சமமானது. அப்படியொரு முடிவை எடுக்க வேண்டிய அவசியமில்லை' என அண்ணாமலையிடம் தெரிவித்தேன்.
கடந்த லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடுவதற்கு வசதியாக, தேனி தொகுதியை விட்டு கொடுத்தவர் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்.
அப்படி உதவி செய்த அவருக்காக, அவரோடு இணைந்து பயணிப்பேன். கூட்டணியில் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது; சுய கவுரவம் பாதிக்கப்பட்டு உள்ளது. எப்போதும், அவருக்காக நான் குரல் கொடுப்பேன்.
'பன்னீர்செல்வம் என்னிடம் கேட்டிருந்தால், பிரதமரிடம் நேரம் வாங்கிக் கொடுத்திருப்பேன்' என நாகேந்திரன் கூறியிருப்பது, ஆணவத்தின் உச்சம். இதையெல்லாம் சகித்துக் கொண்டு, கூட்டணியில் எப்படி இருக்க முடியும்.
தொடர்ந்து நாங்கள் கூட்டணிக்குள் அமைதியாக இருந்திருந்தால், தொடர்ச்சியான துரோகங்கள் நியாயப்படுத்தப்பட்டு விடும். அதனாலேயே, கூட்டணியில் இருந்து வெளியேறினோம்.
நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறியதற்கு முழுமுதல் காரணம், நாகேந்திரன் தான்; அண்ணாமலை அல்ல. ஆனால், தமிழக பா.ஜ., தலைவராக, அண்ணாமலை இருந்தபோது, கூட்டணி தலைவர்களை உரிய மரியாதையோடு நடத்தினார்.நியாயத்தை உணர்ந்து, அநீதியை ஏற்க முடியாமல் கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறினால், உடனே, இதன் பின்னணியில் அண்ணாமலை இருக்கிறார் என்கின்றனர்.
எங்கள் பின்னணியில் அண்ணாமலை இருப்பதாக சொல்வது, அரசியல் முதிர்ச்சியில்லாதவர்கள் கற்பனை. தொண்டர்களின் முடிவைத் தாண்டி, எந்த முடிவையும் எடுக்க முடியாது.
வரும் சட்டசபைத் தேர்தலுக்கு, யாரும் நினைக்காத ஒரு கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது. அப்படி அமையும் கூட்டணியில், அ.ம.மு.க.,வும் இடம் பெறலாம். அந்த கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.