நாகேந்திரன் உடல் நிலை அறிக்கை வேலுார் நீதிபதிக்கு உத்தரவு
நாகேந்திரன் உடல் நிலை அறிக்கை வேலுார் நீதிபதிக்கு உத்தரவு
ADDED : பிப் 20, 2025 01:15 AM
சென்னை:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான, நாகேந்திரனின் உடல் நிலை குறித்து, வேலுார் மாவட்ட நீதிபதி, நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரன், வேலுார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், உடல்நலக் குறைவு ஏற்பட்டு, வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் நாகேந்திரன், சென்னை குரோம்பேட்டை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாகேந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி, ''நாகேந்திரனின் உடல் நிலை மிக மோசமாக உள்ளது.
அவரை உடனே குரோம்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி, சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.
மனுவை விசாரித்த நீதிபதி, நாகேந்திரன் உடல் நிலை குறித்து, வேலுார் மாவட்ட நீதிபதி, மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். பின், விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார்.