தமிழகத்துக்காக முருகனிடம் கோரிக்கை விரதம் இருந்து நாகேந்திரன் வேண்டுதல்
தமிழகத்துக்காக முருகனிடம் கோரிக்கை விரதம் இருந்து நாகேந்திரன் வேண்டுதல்
ADDED : ஜூன் 17, 2025 03:29 AM
சென்னை : மதுரையில் நடக்க உள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று முதல் வரும் 22ம் தேதி வரை விரதம் மேற்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மதுரையில், வரும் 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. இது, மாபெரும் வெற்றி அடைய, இன்று முதல் வரும் 22ம் தேதி வரை விரதம் மேற்கொள்கிறேன்.
மேலும் தமிழ், தமிழர் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் ஆலயங்களை பேணி பாதுகாத்தல்; 2047க்குள் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதன் வாயிலாக, வளமான தமிழகத்தை படைத்தல்; பெண்களுக்கு பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்குதல்; போதைப்பொருள் கலாசாரமற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றுதல்; சமூக நல்லிணக்கத்தையும் பின்தங்கிய சமூகங்களுக்கு பாதுகாப்பையும் உறுதி செய்தல்.
விவசாயிகள் நலனையும் கிராமப்புற மேம்பாட்டையும் வலுப்படுத்துதல் ஆகிய, ஆறு கோரிக்கைகளை வேண்டுதலாகவும் முருகக் கடவுளிடம் சமர்ப்பிக்க உள்ளேன்.
விரதமும், வேண்டுதல்களும் தமிழர் இறை வழிபாட்டு முறைகளில் வேரூன்றிய பண்பாடு என்பதற்கு இணங்க, மேற்கூறிய ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு, முருக பக்தர்கள் அனைவரும், முருகனிடம் வேண்டிக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.