தமிழக பா.ஜ., தலைவரானார் நயினார் நாகேந்திரன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க சூளுரை
தமிழக பா.ஜ., தலைவரானார் நயினார் நாகேந்திரன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க சூளுரை
ADDED : ஏப் 13, 2025 03:18 AM

சென்னை: ''மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஆட்சியாக, ஊழல் மிகுந்த ஆட்சியாக, பெண்களை மதிக்காத ஆட்சியாக, பாலியல் வன்கொடுமை நடத்தும் ஆட்சியாக, மது போதைகளுக்கு அடிமையாக்குகிற ஆட்சியாக தி.மு.க., ஆட்சி உள்ளது. இந்த ஆட்சியை வெகு விரைவாக விரட்டி அடிக்க வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சென்னை வானகரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ., தலைவராக நயினார் நாகேந்திரன், ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு, உள்கட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சான்றிதழை, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தேசிய செயலர் தருண் சுக், மத்திய அமைச்சர் முருகன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் வழங்கினர்.
தொடர்ந்து, நயினார் நாகேந்திரனுக்கு, தேசிய செயலர் தருண் சுக் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின், கட்சி பொறுப்பேற்பு கோப்பில், நயினார் நாகேந்திரன் கையெழுத்திட்டார்.
வேல் யாத்திரை
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
என் மீது நம்பிக்கை வைத்து, மாநில தலைவர் பதவியில் அல்ல; தலைமை தொண்டனாக தேர்வு செய்யப்பட்டதற்கு, அனைவருக்கும் நன்றி.
மத்திய அமைச்சர் முருகன், வேல் யாத்திரை வாயிலாக, ஒரு அடுக்கு கட்சியை மேலே கொண்டு வந்தார்.
'என் மண் என் மக்கள் யாத்திரை' வாயிலாக, தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் நடந்தே பயணம் செய்து, இந்த கோபுரத்தை கட்டி முடித்தது மட்டும் அல்ல; அதன் மேல் கலசங்களையும் வைத்திருக்கிறார் அண்ணாமலை.
நமக்கு கொடுக்கப்பட்டிருக்க வேலை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். இதை, 2026 மே மாதம் நடக்க உள்ள சட்டசபை தேர்தலின்போது செய்ய வேண்டும். காலங்கள் செய்யாததை கிரகங்கள் செய்யும் என்று சொல்வர்.
அந்த கிரகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. மத்திய அமைச்சர் அமித் ஷா சொன்னது போல், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தே தீரும்.
முருகன் தலைவராக இருந்தபோது, 2021 சட்டசபை தேர்தலில், 20 'சீட்' வாங்கி, நான்கில் வெற்றி பெற்றோம். இனி வரக்கூடிய தேர்தல்களில், 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்.
தனி பாணி
மிகப்பெரிய கட்சியில் எனக்கு பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை உண்மையில் பொறுப்பாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்றாலும் கூட, எனக்கு பயமும், அச்சமும் இருக்கிறது.
ஏனென்று சொன்னால், அண்ணாமலை மிக சிறப்பான முறையில் செயல்பட்டுள்ளார். அவரின் பாணி என்பது தனி பாணி. என் விஷயம் வேறு. அவர் புயலாக இருந்தால், நான் தென்றலாக தான் இருக்க முடியும்.
நான், அ.தி.மு.க.,வில் அமைச்சரசாக இருந்தபோது, பொன்.ராதாகிருஷ்ணன் அடிக்கடி என் வீட்டிற்கு வருவார்.
என் உறவினர்கள், அவரின் நண்பர்கள். என்னை பா.ஜ.,வுக்கு வருமாறு அழைப்பார். கட்சியின் துணைத் தலைவர் சக்கரவர்த்தியுடன் சென்று, அமித் ஷா முன்னிலையில், எட்டு ஆண்டுகளுக்கு முன், பா.ஜ.,வின் சேர்ந்தேன்.
அ.தி.மு.க.,வில் மிகப் பெரிய பொறுப்பில் இருந்து வந்த நிலையில், பா.ஜ.,வில் சேர்ந்த பின், பொறுப்பு தரவில்லையே என்ற கோபம், வருத்தம் இருந்தது. இப்போது, அதெல்லாம் கிடையாது.
ஆனாலும் கூட வேகமாக தான் இருப்பேன். சங்கத்தில் ஏழு நாட்கள் பயிற்சிக்கு சென்றேன். பின், 15 நாட்கள் முகாமிற்கு சென்றேன். அதற்கு பின், என் நிலைகளில் மாற்றங்கள் வந்தன. நுாறு ஆண்டு காலம் எந்த ஒரு சங்கமும் இயக்கமும் வளர்ந்தது கிடையாது.
அந்த அளவிற்கு பண்பட செய்தது சங்கம்.
மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஆட்சியாக, ஊழல் மிகுந்த ஆட்சியாக, பெண்களை மதிக்காத ஆட்சியாக, பாலியல் வன்கொடுமை நடத்தும் ஆட்சியாக, மது போதைகளுக்கு அடிமையாக்குகிற ஆட்சியாக தி.மு.க., ஆட்சி உள்ளது. இந்த ஆட்சியை வெகு விரைவாக விரட்டி அடிக்க வேண்டும்.
மாற்றம் உறுதி
இதற்கு அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும். அண்ணாமலை காலில் செருப்பு இல்லாமல் இருக்கிறார். அவர் செருப்பு அணிய வேண்டும். 'ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் செருப்பு அணிவேன்' என்று கூறினார்.
அதற்கு, அமித் ஷா அடிக்கோல் நாட்டியுள்ளார்; நாள் நிச்சயிக்கப்பட்டு விட்டது; நேரம் குறிக்கப்பட்டு விட்டது. 2026 மே மாதம் ஆட்சி மாற்றம் உறுதி. எனவே, அண்ணாமலை இன்றே செருப்பு அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்சியை வழிநடத்தியதை
பாக்கியமாக கருதுகிறேன்
சாதாரண தொண்டர்களை வளர்த்து அழகு பார்க்கும் கட்சி இது. ஒரு தொண்டனை கண்டுபிடித்து, அவருக்கு ஒரு பொறுப்பு வழங்கி, அதன் வாயிலாக கட்சியையும் வளர்த்து, நாட்டையும் வளர்க்கிறது பா.ஜ.,
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையால், தேசிய ஜனநாயக கூட்டணி இன்னும் பலமாகி இருக்கிறது. வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது. புதிய தலைவர் நம்மை வழிநடத்தி, 2026ல் பா.ஜ., ஆட்சியை கொண்டு வருவார். வரும், 2026ல் தீயசக்தி தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
கட்சியை வழிநடத்தியதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன். நான் தலைவராகும்போது என்னை யாருக்கும் தெரியாது. முகம் சுளிக்காமல், பெரிய தலைவர்கள் தொண்டர்களாக என்னுடன் பணியாற்றினர். அப்படிப்பட்ட மனிதர்கள் உள்ள கட்சி. நயினார் நாகேந்திரனுடன் இணைந்து, 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும்.
- அண்ணாமலை
தேசிய பொதுக்குழு உறுப்பினர்