டில்லியில் அமித் ஷாவை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்
டில்லியில் அமித் ஷாவை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்
ADDED : டிச 15, 2025 03:14 AM

சென்னை: டில்லி சென்றுள்ள, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக, அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி அமைத்துள்ளது. கூட்டணியை பலப்படுத்த, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர்களை இணைக்க வேண்டும் என, பா.ஜ., தலைமை விரும்புகிறது. இதை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ரசிக்கவில்லை.
கடந்த 11ம் தேதி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னையில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.
அப்போது, கூட்டணியை பலப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், தி.மு.க., அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டில், மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள், தேர்தல் வியூகங்கள் ஆகியவை குறித்து, இருவரும் விவாதித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று முன் தினம் நயினார் நாகேந்திரன், டில்லி புறப்பட்டு சென்றார். அன்று இரவு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசினார்.
இந்நிலையில், நேற்று இரவு 9:00 மணிக்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அவரது வீட்டில் சந்தித்து பேசினார்; அப்போது கூட்டணி தொடர்பாக, பழனிசாமி தெரிவித்த விஷயங்களை, அவரிடம் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
அத்துடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியானது.

