மூச்சு விடுவதில் சிரமம் நல்லகண்ணுக்கு தீவிர சிகிச்சை
மூச்சு விடுவதில் சிரமம் நல்லகண்ணுக்கு தீவிர சிகிச்சை
ADDED : ஆக 26, 2025 04:03 AM
சென்னை : மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் இருந்து, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, 100. கடந்த 22ம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில், அவரது தலையில் காயம் ஏற்பட்டது.
பின், சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவரை, மருத்துவக் குழுவினர் கண்காணித்து வந்தனர்.
மேலும், 100 வயதாகும் அவருக்கு, வயது மூப்பில் ஏற்பட்ட சில பிரச்னைகளுக்காக, நரம்பியல், நுரையீரல், இதய மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
உடனடியாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவ மனைக்கு நல்லகண்ணு மாற்றப்பட்டார். அங்கு, மருத்துவக் குழுவினர் கண்காணித்து, தேவையான சிகிச்சையை அளித்து வருகின்றனர்.
தற்போது, நல்லகண்ணுவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்ப தாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

