திருச்சூர் ஏ.டி.எம்.,களில் கொள்ளையடித்த ஹரியானா கொள்ளையன் சுட்டுக்கொலை மேலும் 6 பேரை சுற்றி வளைத்தது நாமக்கல் போலீஸ்
திருச்சூர் ஏ.டி.எம்.,களில் கொள்ளையடித்த ஹரியானா கொள்ளையன் சுட்டுக்கொலை மேலும் 6 பேரை சுற்றி வளைத்தது நாமக்கல் போலீஸ்
UPDATED : அக் 06, 2024 07:01 PM
ADDED : செப் 28, 2024 02:01 AM

நாமக்கல்:கேரள மாநிலம் திருச்சூரில், ஏ.டி.எம்.,களில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடன் கன்டெய்னர் லாரியில் தப்பிச் செல்ல முயன்ற, ஹரியானா மாநில 'மேவாட்' கொள்ளையர்களை, நாமக்கல் போலீசார் சுட்டுப் பிடித்தனர். இதில், கொள்ளையர் ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் குண்டடிபட்டு சிகிச்சை பெறுகிறார்.
மேலும் ஐந்து பேர் கைதாகி உள்ளனர். அவர்களிடமிருந்து, திருச்சூரில் கொள்ளையடிக்கப்பட்ட 66 லட்சம் ரூபாயை போலீசார் கைப்பற்றினர்.
ரூ.23 லட்சம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 21ல், ஏ.டி.எம்.,மை உடைத்து, ௨௩ லட்சம் ரூபாய் கொள்ளைஅடிக்கப்பட்டது.
இதில், தொடர்புடைய கொள்ளையர்கள் கேரளாவுக்கு தப்பிச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனால், தமிழகம் - கேரள எல்லையை ஒட்டிய மாவட்டங்களான கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, கன்னியாகுமரி மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
இதற்கிடையில், நேற்று கேரள மாநிலம் திருச்சூரில் இரண்டு இடங்களில், 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' வங்கிக்கு சொந்தமான மூன்று ஏ.டி.எம்.,களை, 'காஸ் வெல்டிங்' மூலம் உடைத்து, ௬௬ லட்சம் ரூபாயை கொள்ளையடித்து, தமிழகத்திற்கு காரில் கொள்ளையர்கள் தப்பினர்.
இந்த தகவலை கேரள போலீசார், தமிழக போலீசாருக்கு தெரிவித்து உஷார்படுத்தினர்.
திருச்சூர் - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களை, கேரள போலீசார் ஆய்வு செய்த போது, திருச்சூர் - பாலக்காடு மாவட்ட எல்லையில், ஒரு கன்டெய்னர் லாரியில், வெள்ளை நிற காரை ஏற்றியபடி, தமிழகத்தை நோக்கி அந்த லாரி செல்வது தெரிந்தது. மீண்டும் தமிழக போலீசாரை, கேரள போலீசார் 'அலெர்ட்' செய்தனர்.
கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்; தடுப்புகள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கொள்ளையர்கள் ஓட்டிச்சென்ற கன்டெய்னர் லாரி, நேற்று காலை 9:00 மணிக்கு, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் செல்வதை கண்டறிந்தனர்.
பின் தொடர்ந்தனர்
இதையடுத்து, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார், லாரியை பின்தொடர்ந்தனர்.
குமாரபாளையத்தை அடுத்த பல்லக்காபாளையத்தில், பெட்ரோல் பங்க்கில் லாரிக்கு டீசல் போட்டனர். பின், அங்கிருந்து சேலம் நோக்கி கன்டெய்னர் லாரி புறப்பட்டது.
பின்தொடர்ந்த போலீசார், பெட்ரோல் பங்க்கில் இருந்த, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, லாரியின் முன்பக்கத்தில் டிரைவர் உட்பட இருவர் இருப்பதை அறிந்தனர். அதில், ஒருவர் துப்பாக்கியுடன் இருப்பதை கண்டனர்.
இதையடுத்து, சேலம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பல நகர போலீசார், 30க்கும் மேற்பட்ட டூ - வீலர்கள் மற்றும் கார்களில் அந்த லாரியை பிடிக்க விரைந்தனர்.
சன்னியாசிப்பட்டி பவர் ஹவுஸ் அருகே, காலை 9:30 மணிக்கு லாரியை சுற்றி வளைத்தனர். ஆனாலும், கொள்ளையர்கள் தப்பிக்க மின்னல் வேகத்தில் லாரியை ஓட்டிச் சென்றனர்.
அப்போது, நான்கு டூ - வீலர்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் மீது அந்த லாரி மோதி இழுத்துச் சென்றது. தொடர்ந்து துரத்திச் சென்ற போலீசார், வெப்படை அருகே காட்டுப் பகுதியில் கன்டெய்னர் லாரியை மடக்கினர்.
போலீசார் அதிரடியாக கேபினில் நுழைந்து, டிரைவர் உள்ளிட்ட இருவரையும் கீழே இறக்கினர். அவர்களிடம் விசாரித்ததில், கேபினுக்குள் இருந்த ரகசிய அறையில் இருவர் இருப்பதாக தெரிவித்தனர்; அவர்களையும் போலீசார் இறங்கச் செய்தனர். தொடர்ந்து அவர்களிடமும் விசாரித்த போது, கன்டெய்னருக்குள் மூவர் இருப்பதாக கூறினர். டிரைவரை அழைத்து வந்து, கன்டெய்னரை திறக்கச் செய்தனர்.
அப்போது, உள்ளே இருந்த மூவரில் இருவர், கடப்பாரையால் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றனர். இதில், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணிக்கு நெஞ்சு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தப்ப முயன்றவர்களை பிடிக்க, அவர் துப்பாக்கியால் சுட்டார்.
இதில், ஜூமான், 40, என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அசீன், 28, என்பவர் இரு கால்களிலும் குண்டு பாய்ந்து மயங்கினார். இதையடுத்து, கன்டெய்னர் லாரியை சோதனை செய்த போலீசார், காரில் பதுங்கியிருந்த மேலும் ஒருவரை பிடித்தனர். டிராவல் பேக்குகளில் வைக்கப்பட்டிருந்த 66 லட்சம் ரூபாய், 'ஹூண்டாய் கிரெடா' காரையும் பறிமுதல் செய்தனர்.
பின், காலை 10:45 மணிக்கு வெப்படை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொள்ளையர்களை அழைத்து சென்ற போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தைச் சேர்ந்த, மேவாட் கொள்ளையர்கள் என தெரிய வந்தது. இர்பான், சபீர்கான், சவ்ஹீன், முபாரக் அத், மொகத் இக்ரம் ஆகியோர் அந்த கும்பலில் காயமின்றி பிடிபட்டனர்.
இந்த கும்பல், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி, ஏ.டி.எம்.,களை மட்டுமே குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளது.
காயமடைந்த இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., ரஞ்சித் ஆகியோர், பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சேலம் டி.ஐ.ஜி., உமா, நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், வெப்படை போலீஸ் ஸ்டேஷனுக்கு, நேற்று மாலை 4:00 மணிக்கு, கேரள மாநிலம் திருச்சூர் போலீசார் மற்றும் கிருஷ்ணகிரி எஸ்.பி., தங்கதுரை ஆகியோர் வந்து, கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.