ADDED : மார் 25, 2025 04:53 AM
சென்னை : தமிழகத்தில் எட்டு இடங்களில் நடக்க உள்ள நம்ம ஊரு திருவிழாவுக்கு, மாவட்டந்தோறும் நடந்த கலைக்குழு தேர்வுகளில், 10,000க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.
தமிழர்களின் பண்பாடு, நாட்டுப்புறக் கலைகளை பாதுகாக்கும் நோக்கில், பொங்கல் பண்டிகையின்போது சென்னையில் நம்ம ஊரு திருவிழா நடத்தப்படுகிறது.
கலை பண்பாட்டு துறை சார்பில், 18 இடங்களில் நடத்தப்பட்ட விழாவுக்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, தமிழகம் முழுதும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
முதற்கட்டமாக, கோவை, தஞ்சை, வேலுார், சேலம், நெல்லை, காஞ்சிபுரம், மதுரை, திருச்சி ஆகிய எட்டு இடங்களில் நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் கிராமிய கலைக்குழுவினரை தேர்வு செய்வதற்காக, மாவட்டங்களில் கடந்த 22, 23ம் தேதிகளில் கலைஞர்கள் தேர்வு நடந்தது.
இதில், 1,031 குழுக்களைச் சேர்ந்த, 10,000க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். அவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி, 5 நிமிட வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இனி, அவற்றில் சிறந்த குழுக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
ஒரு மண்டலத்துக்கு 375 கலைஞர்கள் வீதம், 3,000 கலைஞர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு, 'எடிட்' செய்யப்பட்ட வீடியோ வழங்கப்பட உள்ளது. இதை, அவர்களின் தொழில் மேம்பாட்டுக்கு பயன்படுத்தலாம்.
சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில் வாய்ப்பு பெறும் கலைஞர்களுக்கு, 3,000 ரூபாய் சன்மானம், புதிய ஆடை, போக்குவரத்து செலவு உள்ளிட்டவை வழங்கப்படும்.