நாங்குநேரி மாணவன் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்; மருத்துவமனையில் பதற்றம்
நாங்குநேரி மாணவன் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்; மருத்துவமனையில் பதற்றம்
UPDATED : ஏப் 16, 2025 10:30 PM
ADDED : ஏப் 16, 2025 09:41 PM

திருநெல்வேலி: கடந்த 2023ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் தாக்குதலுக்கு உள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது மீண்டும் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த கூலித் தொழிலாளி முனியாண்டி - அம்பிகாபதி தம்பதியின் மகன் சின்னதுரை,20. திருநெல்வேலி திருமால் நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் அரசு ஏற்பாட்டில் வசிக்கின்றனர்.
இவர் கடந்த 2023ம் ஆண்டு அரசு பள்ளியில் படித்து வந்த போது, வேறு சமுதாய மாணவர்களுடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதனால், அவர் படித்த அதே பள்ளியைச் சேர்ந்த வேறு சமுதாய மாணவர்கள் சிலர், சின்னதுரையை அவரது வீட்டிற்குள் புகுந்து, அரிவாளால் வெட்டினர். தடுக்க முயன்ற தங்கையையும் வெட்டினர். பலத்த காயமடைந்த இருவரும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சின்னதுரை மீது 5 பேர் கொண்ட கும்பல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆன்லைன் செயலி மூலம் பழகிய சிலர், சின்னதுரையை தனியாக வரவழைத்து கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அவருக்கு ஏற்கனவே காயம் ஏற்பட்ட கையில் மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது.
சின்னதுரையை கடுமையாக தாக்கிய கும்பல் அவரிடம் இருந்து செல்போன், மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
சின்னதுரை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்த திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் சாந்தாராம்,மற்றும் உதவி ஆணையர் சுரேஷ் நேரில் விசாரித்து வருகின்றனர்.
மேலும், தாக்குதல் நடத்திய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.