நன்றி தெரிவித்தார் நாராயணசாமி; நல்ல வேலை தருவதாக இபிஎஸ் உறுதி!
நன்றி தெரிவித்தார் நாராயணசாமி; நல்ல வேலை தருவதாக இபிஎஸ் உறுதி!
ADDED : செப் 07, 2025 05:39 PM

திண்டுக்கல்: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் கைகள் பொருத்தப்பட்ட திண்டுக்கல் தொழிலாளி நாராயணசாமி, அதற்கு உதவிய அப்போதைய முதல்வர் இபிஎஸ்க்கு நன்றி தெரிவித்தார். அவருக்கு, அதிமுக ஆட்சி அமைந்ததும் வேலை தருவதாக இபிஎஸ் உறுதி அளித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை அடுத்த போடிக்காமன்வாடியை சேர்ந்தவர் நாராயணசாமி. கட்டட தொழிலாளி. கடந்த 2015ம் ஆண்டு சித்தையன் கோட்டையில் கட்டட வேலை செய்து கொண்டிருந்தார். இரும்புக்கம்பியை தூக்கியபோது, அது உயர் அழுத்த மின்வயரில் உரசியது. அதில், அவரது 2 கைகளும் முழங்கைக்கு கீழ் கருகியது.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலனில்லை. மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்களை சந்தித்தார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 2 கைகளையும் பொருத்த முடியும் என தெரிவித்தனர். இத்தகைய சூழ்நிலையில், மரணம் அடைந்த ஒருவரின் 2 கைகளையும் தானமாக வழங்க அவரது உறவினர்கள் முன்வந்தனர். இதனையடுத்து 2018ம் ஆண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 75 பேர் கொண்ட டாக்டர் குழுவினர், 13 மணி நேரம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து, நாராயணசாமிக்கு கைகளை பொருத்தினர். ஓராண்டு மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.
இந்த சிகிச்சைக்கு உதவிய அப்போதைய முதல்வர் இபிஎஸ்.,ஐ அவரது திண்டுக்கல் பிரசாரத்தில் நேற்று நாராயணசாமி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.