எல்லா விதத்திலும் தோல்வியடைந்த மத்திய அரசை தூக்கி எறியுங்கள்: மோடி ஆவேசம்
எல்லா விதத்திலும் தோல்வியடைந்த மத்திய அரசை தூக்கி எறியுங்கள்: மோடி ஆவேசம்
UPDATED : செப் 27, 2013 10:56 AM
ADDED : செப் 26, 2013 11:43 PM

திருச்சி: பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி பங்கேற்ற, 'இளந்தாமரை' பிரமாண்ட மாநாட்டை காண, திருச்சியில் நேற்று ஏராளமானோர் குவிந்தனர். தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் உரையாற்றிய மோடி, ''எல்லா விதத்திலும் தோல்வி அடைந்த, மத்திய அரசை, தூக்கி எறியுங்கள்,'' என, மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். அதே நேரத்தில், கூட்டணிக்கு அடித்தளம் அமைக்கும் விதமாக, மாநிலத்தின் பிரதான கட்சிகளான, தி.மு.க., அ.தி.மு.க.,வை விமர்சிப்பதைத் தவிர்த்தார்.
திருச்சி, 'ஜி' கார்னர் மைதானத்தில், நேற்று, பா.ஜ., இளந்தாமரை மாநாடு நடந்தது. பா.ஜ., அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங், குஜராத் முதல்வரும், பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பங்கேற்றனர். மோடியை வரவேற்ற திருச்சி முழுவதும் பேனர், போஸ்டர் வைக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. அவரது பேச்சை கேட்க லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்கள் வந்த வாகனங்கள், நகரின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்தன. பா.ஜ., தொண்டர்கள், பொதுமக்கள் வந்தவண்ணம் இருந்ததால் திருச்சி குலுங்கியது. தனி விமானம் மூலம் திருச்சி வந்த மோடி, ஓட்டலில் சிறிது நேர ஓய்வுக்கு பின், மேடைக்கு வந்தார். பின் அவர் பேசத் துவங்கிய போது, ''சில நாட்களுக்கு முன், கென்யாவில் இந்தியாவைச் சேர்ந்த சிலர் கொல்லப் பட்டுள்ளனர். அவர்களுக்கும், நமது எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கும், 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும்,'' என்றார். அவரது வேண்டுகோளை ஏற்று, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
நம் நாட்டில் போரால் உயிரிழந்த ராணுவத்தினரின் எண்ணிக்கையை விட, பயங்கரவாதிகளின் தாக்குதலில் இறந்த வீரர்களின் எண்ணிக்கை தான் அதிகம் என்பதை உணரும்போது, கோபம் தான் வருகிறது. மொத்தம், 125 கோடி மக்கள் உள்ள நம் நாட்டில், கேரள மீனவர்களை, இத்தாலி நாட்டினர் கொல்லும்போது, பாகிஸ்தான், நம் ராணுவ வீரர்களின் தலையை துண்டிக்கும்போது, எல்லையில் வீரர்களை சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் நடக்கும்போது, நம் பிரதமர், பாகிஸ்தான் பிரதமரோடு, பிரியாணி சாப்பிடுகிறார் என்றால், நாட்டில் நடந்து கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது! கையாலாகாத நாடாக, பலவீனமான, சக்தி இல்லாத நாடாக, நாட்டின் உள்ளே புகுந்து சதிச்செயல்கள் நடத்தப்படும் நாடாக, இந்தியா இருப்பது ஏன் என்ற கேள்வி, அனைவர் மனதிலும் எழுகிறது. பாகிஸ்தான், நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் வேளையில், அந்நாட்டு அதிகாரிகளுடன் பிரதமர் பேச்சு நடத்துவது தேவையா?
தன்னை, அமெரிக்கா கண்காணிக்கிறது என்று அறிந்த பிரேசில் நாடு, அமெரிக்க பிரதிநிதிகள் குழு, தன் நாட்டுக்குள் நுழைய, எதிர்ப்பு தெரிவித்தது. தன்மானத்தை காக்க, பிரேசில் எடுத்த நடவடிக்கையை, பாராட்ட வேண்டும். அதேபோல், அமெரிக்க உளவுத் துறையில்
பணியாற்றிய ஸ்னோடென், அந்நாடு, மற்ற நாடுகளை உளவு பார்த்த விஷயத்தை
வெளியிட்டார். அவரை
கைது செய்ய, அமெரிக்கா முயற்சித்தது. அவர், ரஷ்யாவில் தஞ்சம் அடைந்தார்.
அந்நாடு அவருக்கு, புகலிடம் கொடுத்தது. இதனால், அமெரிக்க அதிபர் ஒபாமா,
'ரஷ்யா மண்ணில் கால் வைக்க மாட்டேன்' என்று கூறினார். இது தான்
நாட்டுப்பற்று! சிறியதோ, பெரியதோ, ஒரு நாட்டின் தன்மானத்துக்கும், சுய
கவுரவத்துக்கும் இழுக்கு ஏற்படுமானால், எதைப் பற்றியும் கவலைப்படாமல்,
சூழல் பற்றியும் கவலைப்படாமல், தன் நாட்டின் சுயகவுரவம், தன்மானத்தை
காப்பாற்ற, தலைவர்கள், வீறு கொண்டு எழுந்து நிற்பது வழக்கம். நான்
பிரதமரிடம் ஒன்று கேட்க
@nextcolumn@ விரும்புகிறேன்... நாட்டின் தன்மானத்துக்கு,
கவுரவத்துக்கு முன்னுரிமை கொடுக்காமல், உலக நாடுகளின் நிர்பந்தத்துக்காக,
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை தேவையா? ஒரு நாட்டின் ராணுவ வீரர்களுக்கு
பாதுகாப்பு இல்லை. எல்லைக்கு பாதுகாப்பில்லை. மக்களுக்கு பாதுகாப்பில்லை.
எந்த மாநிலமாக இருந்தாலும், அதற்கு பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பில்லா அரசு இருக்கும்போது, நம் முதல் கடமை, அந்த அரசை தூக்கி எறிய வேண்டும் என்பது தான்.
டில்லியில் உள்ள அரசு, நாட்டின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தியுள்ளது. முழுமையாக வீழ்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் நாம் பொருளாதார ரீதியாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு, நாட்டின் நாணய மதிப்பை வீழ்த்தியுள்ளது. காங்கிரஸ் அரசு தொடர்ந்தால், நாட்டின் நாணயத்துக்கு மதிப்பில்லாத சூழல் ஏற்படும். இந்த ஆட்சி இன்னும், ஐந்தாண்டுகள் நீடித்தால், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்கள், வேலை இழந்து, சாலையோரங்களில் பிச்சை எடுப்பர் என, மேதைகளும், பொருளாதார நிபுணர்களும் கூறுகின்றனர். மக்களிடம் பிளவை ஏற்படுத்தி, பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் ஆட்சியை நீடிக்க காங்கிரஸ் விரும்புகிறது. காங்கிரஸ் கட்சியானது மனதால், வாக்கால், சிந்தனையால் பிளவு பட்ட சிந்தனை உள்ள கட்சியாகும். நாட்டில் உள்ள மக்கள் ஒருமைப்பாட்டுக்காக போராடிய போது, காங்கிரஸ் நாட்டை இரண்டாக பிளந்தது. அரசியல் சட்டதை உருவாக்கும்போது கூட, அதில் பிளவை ஏற்படுத்தியது. இந்தியாவில் உள்ள காஷ்மீரில் தனிச்சட்டம், தனிக்கொடி, தனி பிரதமர் என்ற நிலை உள்ளது. அந்த பாவத்தை செய்ததும் காங்கிரஸ் தான். நாட்டின் நதிநீர் பிரச்னையில் மாநிலங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்திய பாவத்தையும் காங்கிரஸ் செய்துள்ளது. பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளும் காங்கிரஸ் கட்சி, மொழிவாரி மாநிலங்களை ஏற்படுத்தி, மொழிவாரியாக மக்களை பிரிக்கும் பாவத்தையும் செய்கிறது.
கடந்த, 1857ல் இந்துக்களும், முஸ்லிம்களும் சுதந்திரத்துக்காக போராடியபோது, மதத்தின் பெயரால் பிளவை ஏற்படுத்தியது காங்கிரஸ். ஓட்டு வங்கிக்காக இந்த பாவத்தை காங்கிரஸ் செய்கிறது. ஜாதிகளுக்கு இடையே பிளவை
ஏற்படுத்திய பாவத்தையும் காங்கிரஸ் செய்துள்ளது. சகோதரர்களுக்குள்
சண்டையை மூட்டிவிட்டு, ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவும்,
நாட்டில் எல்லா விதத்திலும் பிளவை ஏற்படுத்தி ஆட்சியை காப்பாற்ற நினைக்கும்
காங்கிரஸ் பிடியிலிருந்து, நாடு விடுதலை பெற வேண்டும். நானோ, நீங்களோ
அறிந்திருப்பதை விட, காங்கிரஸ் இயல்பை அதிகம் அறிந்தவர் காந்தி. அதனால்
தான் அவர், சுதந்திரம் கிடைத்தவுடன், 'காங்கிரஸ் கட்சியை கலைத்து
விடுங்கள்' என்றார். அவருடைய விருப்பதை நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு
உள்ளது. நாம் தான் காங்கிரசை கலைக்க வேண்டும். நாட்டை காப்பற்ற
வேண்டுமானால், காங்கிரஸ் கட்சியிடமிருந்தும், அதனுடன் இணைந்து செயல்படும்
கட்சிகளிடமிருந்தும், அக்கட்சிக்கு தரகு வேலை பார்க்கும்
சக்திகளிடமிருந்தும், நாட்டை விடுவிக்க வேண்டும். காங்., கட்சியை தூக்கி
எறிய வேண்டும். இவ்வாறு, நரேந்திர மோடி பேசினார்.
தமிழக நிலையைப் பற்றிப் பேசும்போது, மின் வெட்டு, இளைஞர்களுக்கு வேலை
வாய்ப்பின்மை, சிறுதொழில்கள் நசிவு ஆகிய பிரச்னைகளைப் பற்றி, மோடி
குறிப்பிட்டார். ஆனால், அவற்றுக்கெல்லாம், மத்திய அரசே காரணம் எனவும்
குற்றம் சாட்டினார். தமிழகத்தில் உள்ள் பிரதான கட்சிகளான, தி.மு.க., அ.தி.மு.க., ஆகியவற்றை விமர்சிப்பதை
தவிர்த்தார். இதன் மூலம், லோக்சபா தேர்தலில், ஏதாவது ஒரு கட்சியின் கூட்டணி
ஏற்படுத்த,
@nextcolumn@அடித்தளம் அமைக்கும் முயற்சியில் மோடி ஈடுபடத் துவங்கியது,
வெளிப்படையாகத் தெரிந்தது.
எம்.ஜி.ஆர்., பாணி:
தி.மு.க., வில் எம்.ஜி.ஆர்., இருந்தபோது, பொதுக்கூட்டங்களில் மற்ற தலைவர்கள் இருந்தாலும், அவர் கலந்து கொள்கிறார் என்றால், கட்சியினர் மட்டுமல்லாமல், அவரை பார்க்கவே அதிக கூட்டம் கூடும். அதுபோலவே, பா.ஜ., கட்சிக்காக என்றில்லாமல், மோடி என்ற தனிமனிதருக்காக, திருச்சி மாநாட்டில் வயது வித்தியாசமின்றி, அதிக கூட்டம் கூடியது. பொதுக் கூட்டங்களில் எம்.ஜி.ஆர்., பேசும் போது, கூட்டத்தினரிடம் கேள்வி கேட்டு, பதில் பெறுவார். அதே பாணியில் மோடியும், கூட்டத்தினரிடம் கேள்வி கேட்டு, ஒரே குரலில் பதில் பெற்றார்.
தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான்:
திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய மோடி முதலில் தமிழில் சிறிது நேரம் பேசினார். தமிழ் மொழியையும் தமிழர்களையும் உயர்வாக பேசியதோடு, தமிழ்க் கவிஞர்களையும் மேற்கோள் காட்டிப் பேசினார். அவர் பேசியதாவது: தமிழ் மண்ணே வணக்கம். தமிழ் என்று சொன்னால் காதில் தேன் வந்து பாயும். கம்பன், வள்ளுவனை தந்த மாநிலம் என்று பாரதியார் பாடினார். தமிழ்நாடு. காவிரி பாயும் பூமி. தமிழகத்தின் மத்திய பகுதி திருச்சி. தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அதற்கொரு குணமுண்டு என்று ராமலிங்கம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார். தமிழக மக்கள் கடின உழைப்பாளிகள்; நேர்மையானவர்கள்; அதற்கு மேல், விசுவாசமானவர்கள். தமிழக மக்களுக்கு அவர்கள் வேலை செய்யும் இடம் கோயில். உலகின் முக்கிய மென்பொருள் நிறுவனங்களில் ஏராளமான தமிழர்கள் பணியாற்றி வருகின்றனர்.தமிழக மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மிகவும் தரம் வாய்ந்தவையாக உள்ளன. தமிழ் உலகின் மிகவும் பழமையான மொழி. நான் சங்க இலக்கியங்களைப் படிக்க விரும்புகிறேன். தமிழகத்திற்கும், குஜராத்திற்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. சென்னையில் மினி குஜராத் என்றழைக்கப்படும் சவுகார் பேட்டையில் நிறைய குஜராத்திகள் உள்ளனர். அதே போல், மினி தமிழ்நாடு என்றழைக்கப்படும் குஜராத் மாநிலம் மணிநகரில் ஏராளமான தமிழர்கள் இருக்கிறார்கள். நான் அந்த மணிநகர் தொகுதியிலிருந்துதான் சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன். என்னை தமிழர்கள் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுத்துள்ளனர். அங்கு தமிழர்களும், குஜராத்திகளும் ஒற்றுமையாக உள்ளனர். நாட்டில் அதிக பருத்தியை உற்பத்தியை செய்யும் மாநிலம் குஜராத்; அதை அதிகளவில் வாங்கும் மாநிலம் தமிழ்நாடு. குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவது போல், இங்கு தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தமிழகத்தையும் குஜராத்தையும் ஒப்பிட்டு பேசினார்.
