காவல் துறை அலட்சியத்தால் மாணவிக்கு பாலியல் வன்முறை தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்
காவல் துறை அலட்சியத்தால் மாணவிக்கு பாலியல் வன்முறை தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்
ADDED : டிச 27, 2024 01:49 AM
சென்னை:'தமிழக காவல் துறையின் அலட்சியம் காரணமாக, 19 வயது மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாகி உள்ளார்' என, தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலையின், 19 வயது மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. 'பாதிக்கப்பட்ட மாணவிக்கு தகுந்த மருத்துவ உதவி செய்ய வேண்டும். அவர் இயல்பு நிலைக்கு திரும்ப கவுன்சிலிங் தர வேண்டும்' என, ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
மேலும், 'பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையை வெளியிட்ட போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு, தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.
'மாணவியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய நபர், தொடர்ந்து இது போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர் என தெரிந்திருந்தும், அவர் மீது பல வழக்குகள் இருந்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன்? காவல் துறையின் அலட்சியம் காரணமாக, 19 வயது மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்' எனவும், ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

