தமிழகத்தில் 41 ஆயிரம் கி.மீ.,க்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பு; மத்திய இணை அமைச்சர் ஸ்ரீ ஹரிஷ் மல்கோத்ரா
தமிழகத்தில் 41 ஆயிரம் கி.மீ.,க்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பு; மத்திய இணை அமைச்சர் ஸ்ரீ ஹரிஷ் மல்கோத்ரா
ADDED : பிப் 18, 2025 06:11 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தில் 41 ஆயிரம் கிலோ மீட்டருக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்தல் உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, என மத்திய பெரு நிறுவனங்கள் விவகாரத்துறை, சாலைப்போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஸ்ரீஹரிஷ் மல்கோத்ரா தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் அவர் கூறியதாவது:
நாட்டில் பின்தங்கியுள்ள 112 மாவட்டங்களை மேம்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கிய முன்னேற துடிக்கும் மாவட்டங்கள் திட்டத்தில் விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இங்கு மத்திய, மாநில அரசுகளின் திட்ட செயல்பாடுகள் குறித்து 3 மாதங்களுக்கு ஒரு முறை மத்திய அமைச்சர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் பா. ஜ., ஆட்சி அமைந்த பின் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 41 ஆயிரம் கிலோ மீட்டர் துாரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பு, ரூ.1260 கோடியில் சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையம், பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் தமிழகத்தில் 12 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள், துாய்மை இந்தியா திட்டத்தில் 59 லட்சம் வீடுகளில் கழிப்பறைகள், ஜல்ஜீவன் திட்டத்தில் 90 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள், பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 79 லட்சம் பேருக்கு ரூ. 5 லட்சத்திற்கான காப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் 1350 பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் துவங்கப்பட்டு 90 சதவீத தள்ளுபடி விலையில் உயிர்காக்கும் மருந்துகள் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.1.60 கோடி ஜன்தன் வங்கி கணக்குகளும், 5.7 கோடி முத்ரா வங்கி கணக்குகளுக்கு எவ்வித ஜாமின் இன்றி கடன் வழங்கப்பட்டுள்ளது. சேலம் விமான நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நடந்து வருகிறது.
மத்திய அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றார்.