ADDED : ஆக 26, 2025 06:10 AM
சென்னை: ''தே.மு.தி.க., சார்பில், 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு' வரும் ஜனவரி 9ம் தேதி கடலுாரில் நடைபெறும்,'' என அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
எம்.ஜி.ஆரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர் விஜயகாந்த். அதனால், மக்கள் அவரை, 'கருப்பு எம்.ஜி.ஆர்.,' என அழைத்தனர். எம்.ஜி.ஆர்., பெயரை மற்றவர்கள் பயன்படுத்துவது பற்றி, அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
இதுவரை, 10 மாநில மாநாடுகளை தே.மு.தி.க., நடத்தி விட்டது. விஜயகாந்த் இருந்தபோது, 2011ல், 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு' நடந்தது. அதன் பிறகு, அவர் எதிர்க்கட்சித் தலைவரானார்.
இப்போது, வரும் ஜனவரி 9ம் தேதி, தே.மு.தி.க., சார்பில், 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு - 2.0' என்ற பெயரில், கடலுார் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள பாசார் கிராமத்தில் நடக்க உள்ளது. மக்களாலும், தெய்வத்தாலும் ஆசிர்வதிக்கப்பட்ட மாநாடாக இது அமையும். மாநாட்டிற்கு முன், கூட்டணி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.