sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

2026 தேர்தலில் என்.டி.ஏ Vs தமிழ்நாடு இடையே தான் போட்டி; முதல்வர் ஸ்டாலின் பேச்சு

/

2026 தேர்தலில் என்.டி.ஏ Vs தமிழ்நாடு இடையே தான் போட்டி; முதல்வர் ஸ்டாலின் பேச்சு

2026 தேர்தலில் என்.டி.ஏ Vs தமிழ்நாடு இடையே தான் போட்டி; முதல்வர் ஸ்டாலின் பேச்சு

2026 தேர்தலில் என்.டி.ஏ Vs தமிழ்நாடு இடையே தான் போட்டி; முதல்வர் ஸ்டாலின் பேச்சு

33


UPDATED : ஜன 26, 2026 07:23 PM

ADDED : ஜன 26, 2026 07:08 PM

Google News

UPDATED : ஜன 26, 2026 07:23 PM ADDED : ஜன 26, 2026 07:08 PM

33


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சை: வரும் சட்டசபை தேர்தலில் என்டிஏ Vs தமிழ்நாடு இடையே தான் போட்டி என்று தஞ்சையில் நடந்த மகளிர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தஞ்சை அருகே செங்கிப்பட்டியில் வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பெயரில் டெல்டா மண்டல திமுக மகளிர் மாநாடு நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் அப்போது பேசியதாவது;

வீட்டை மட்டுமல்ல, கழகத்தை நாங்கள் காப்போம் என்றும் உணர்வோடு இங்கே திரண்டுள்ளீர்கள். வீடு. கழகம் மட்டுமல்லாது தமிழகத்தையும், ஏன் இந்தியாவையும் காக்க தயார் என்று துணிச்சலுடன் திரண்டு உள்ளீர்கள். நவீன தமிழ்நாட்டின் சிற்பியான கருணாநிதியை கொடுத்த மண் இந்த மண். காவிரி நீரை குடித்து வளர்ந்தவர் கருணாநிதி. ஏன் நானும் டெல்டாக்காரன் தான்.

இன்றைக்கு திராவிட ஆட்சியில் 1 கோடியே 30 லட்சம் சகோதரிகளுக்கு இந்த ஸ்டாலின் உரிமை தொகை வழங்கி கொண்டு இருக்கிறேன். நான் முதல்வராகி முதல் கையெழுத்து, பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்திற்குத்தான். ஸ்டாலின் பஸ் என்றே மக்கள் அதற்கு பெயர் வைத்துவிட்டனர். அதுதான் அந்த திட்டத்தின் வெற்றி.

5 லட்சம் மாணவியர்

கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிற புதுமை பெண் திட்டத்தில் 5 லட்சம் மாணவிகள் பயன் அடைகின்றனர். கொரோனா கால இன்னல்களில் இருந்து மகளிர் சுய உதவிக்குழுக்களை காத்திட்ட கூட்டுறவு சங்கங்கள் மூலமாக அவர்களுக்கு வழங்கப்பட்ட 2674 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துவிட்டு 17 லட்சத்து 33 ஆயிரத்து 696 சுய உதவி குழுக்களுக்கு 1 லட்சத்து 5 ஆயிரத்து 235 கோடி ரூபாய் வங்கிக்கடன் இணைப்புகள் வழங்கி சாதனைகள் படைத்திருக்கிறோம்.

மக்களை தேடி மருத்துவத்திட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களை ஈடுபடுத்தவது மூலம் அவர்களின் தன்னலமற்ற சேவைக்கு அங்கீகாரம் பெற்று தந்துள்ளோம். முதல்வர் காலை உணவு திட்டத்தில் சுயஉதவிக்குழு மகளிரை பங்குபெற செய்திருக்கிறோம். பணிக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு தோழி விடுதிகளை திறந்திருக்கிறோம். அடுத்து இன்னும் பல மாவட்டங்களில் தொடர்ந்து திறக்க உள்ளோம்.

உள்ளாட்சியில் மகளிர் அதிகாரமிக்கவர்களாக வரவேண்டும் என்பதற்காக 50 சதவீதம் வழங்கி இருக்கிறோம். ஜெயித்த பெண்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் சுயஉதவிக்குழு மகளிர்தான். அதில் எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சி.

மன நிறைவாக இருக்கிறேன்

இப்படி பெண்ணுரிமைக்கான ஆட்சியாய், பெண்கள் கேட்காமலேயே அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது தான் நமது திராவிட மாடல் ஆட்சி. நான் செல்லும் இடங்களில் அதிகம் கூடுபவர்களும் மகளிர்தான். ஆட்சியை பற்றி கேட்கும் போது உரிமை தொகை பயன் உள்ளதாக உள்ளது, ஸ்டாலின் பஸ்சில் வேலைக்கு செல்கிறேன், 1000 உரிமை தொகை கிடைப்பதால் கல்லூரிக்கு அனுப்புகிறார்கள் என்று பெண்கள் சொல்லுவதை நான் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனக்கு மனநிறைவாக உள்ளது, இதற்காக தான் ஆட்சிக்கு வந்தேன் என்பதை நினைத்து உண்மையிலேயே நான் பெருமையாக அடைந்து கொண்டு இருக்கிறேன். 5 ஆண்டுகளில் ஒவ்வொரு குடும்பமும் பயன்பெற கூடிய வகையில் நமது அரசு செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது. இதை எல்லாம் வீடு, வீடாக சென்று பரப்புரை செய்யும் பெரிய கடமையை நான் பெண்களாகிய உங்களை நம்பித்தான் ஒப்படைத்து இருக்கிறேன்.

வீட்டோடு வாசல் வரை தான் ஆண்களால் போக முடியும். ஆனால் நீங்கள் (மகளிர்) நினைத்தால் அந்த பெண்மணியின் மனசுக்குள்ளே நுழைய முடியும். அதுதான் மகளிருக்கு இருக்கக்கூடிய சக்தி.

ஓய்வில்லை; உறக்கமில்லை

ஜனநாயக போர்க்களத்தில் வெற்றியை பெறுகிற வரைக்கும் உங்களுக்கும், உங்களை வழிநடத்தும் தலைமை தொண்டனான எனக்கும் ஓய்வில்லை, உறக்கமில்லை, உங்களுக்கும் ஓய்வு கிடையாது. மகளிர் அணியினர் பரப்புரையின் முன்கள வீராங்கனைகளாக நிற்க வேண்டும். ஏன் என்றால் எதிரணியின் பொய் பிரசாரங்களை பெண்களான உங்களால் தான் முறியடிக்க முடியும்.

வாதத்தால் உங்களால் தான் வெல்ல முடியும். அதனால் தான் அதிகமாக நான் உங்களை நம்புகிறேன். பெண்களையும், இளைஞர்களையும் தான் நான் நம்புகிறேன். 2 நாட்கள் முன்பு தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடி, ஏராளமான பொய்களை சொல்லிவிட்டு போய் இருக்கிறார்.

உலக வரைபடத்தில் இருக்கும் அத்தனை நாடுகளுக்கும் போய்விட்டு தேர்தல் காலங்களில் நம்ம இந்தியாவுக்குள் வருவார் நம்ம பிரதமர். இப்போது தமிழகத்திற்கு தேர்தல் சீசன். இங்கேயும் வந்தார்.. இனியும் வருவார்.

கிடைத்தது புது கன்டென்ட்

பிரதமர் வருகிறார் என்றவுடன் நான் அவரிடத்தில் பல கேள்விகளை முன் வைத்தேன். வருவதற்கு ரெண்டு நாள் முன்னாடி சில கேள்விகளை முன்வைத்தேன். அதை நீங்கள் ஊடகங்களில் பார்த்து இருப்பீர்கள்? ஆனால் அதில் எதற்கும் பதில் சொல்லாமல் வழக்கம் போல் பழைய கன்டென்ட் பேசிவிட்டு, நமக்கு புது கன்டென்ட் கொடுத்துவிட்டு போயிருக்கிறார்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு அபாண்டமான பொய்யை சொல்லிவிட்டு பிரதமர் போயிருக்கிறார். எப்படி கூச்சம் இல்லாமல் பொய் பேசுகிறார் என்று பாருங்கள். பாஜ ஆளும் மாநிலங்களில் குறிப்பாக பாஜவினரால் பெண்கள் படும் தொல்லைகள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டே தமிழகத்தின் மீது அவதூறு பரப்ப, பிளைட்டில் வந்துவிட்டு போய் இருக்கிறார்.

இந்திய மாநிலங்களிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் எங்க தமிழ்நாடு தான் என்று அடித்துச் சொல்கிறேன் (தான் பேசிக் கொண்டு இருக்கும் அந்த மேடையில் தனது வலது கையை 3 முறை ஓங்கி அடித்தபடி பேசுகிறார்). இங்கேதான் அதிகமான பெண்கள் வேலைக்கு போறாங்க,

பிரதமர் அவர்களே? மணிப்பூரை மறந்துவிட்டீர்களா? 2023ம் ஆண்டு மே மாதம் எரிய தொடங்கின மணிப்பூரில் இதுவரை அரசு கணக்கின்படி பார்த்தோம் என்றால் 260 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். உண்மையான எண்ணிக்கை இன்னும் ஒரு மடங்கு இருக்கும். 3000 பேர் காயம் அடைந்துள்ளனர்.

1 லட்சம் பேர் மாநிலத்தை விட்டு இடம்பெயர்ந்துவிட்டனர். மணிப்பூரில் 3 ஆண்டுகளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இத்தனைக்கும் மணிப்பூரை ஆண்டது பாஜ. அவர்களின் டபுள் இன்ஜின் ஏன் மணிப்பூர் மக்களை காப்பாற்றவில்லை?

மணிப்பூர் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வீடுகள் எல்லாவற்றையும் போராட்டக்காரர்கள் தாக்கி இருக்கிறார்கள். ஆனால் மணிப்பூரை ஆண்ட பாஜவால் ஏன் அமைதியை இதுவரைக்கும் ஏற்படுத்த முடியவில்லை? இதுதான் பாஜ லட்சணமா?

அவதுாறு பரப்பாதீங்க

மணிப்பூர், உ.பி.யை பிரதமர் பார்க்கட்டும், ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிங்களுக்கு இந்த 2 மாநிலங்களில் இருந்துதான் போதை பொருட்கள் பரவுகிறது என்று ஆதாரங்களுடன் செய்திகள் வருகிறதே? பத்திரிகைகளை நீங்கள் படிப்பது இல்லையா? இதை எல்லாம் மறைத்துவிட்டு அமைதியான தமிழகம் மீது அவதூறு பரப்பாதீங்க?

தோற்ற கூட்டணியை புதுப்பித்துக் கொண்டு அதற்கு பில்டப் கொடுத்து இருக்கிறார்கள். அந்த கூடடணியில் இருக்கும் எல்லாருமே ஈடி, ஐடி, சிபிஐ என்று ஏதோ ஒரு வகையில் பாஜவிடம் சிக்கி அந்த வாஷிங்மெஷிங் தங்களையும் வெளுக்காதா என்ற நப்பாசையில் கையை கட்டி உட்கார்ந்து இருக்கின்றனர்.

ஏற்கனவே இதே அதிமுக பாஜ கூட்டணி 2019 தேர்தல், 2021 தேர்தலில் ஒன்றாக நின்று பார்த்தனர், தோற்று போனார்கள். அடுத்து 2024 தேர்தலில் அதிமுக பாஜ என்கிற வேஸ்ட் லக்கேஜை (waste luggage) கேட்டுட்டு நிற்கலாம் என்று அப்புறம் மறைமுக கூட்டணியாக வந்தனர். அந்த கெட்டப்பில் வந்தாலும் உங்களுக்கு கெட் அவுட்தான் என்று தமிழக மக்கள் திரும்பவும் சொல்லிவிட்டாங்க.

பிளாக்மெயில் கூட்டணி

இப்போது பழையபடி உடைந்து போன எல்லாத்தையும் ஒட்டி எடுத்துக் கொண்டு புதியதாக என்டிஏ அரசு என்று சொல்லி வந்திருக்கின்றனர். அதிமுக பாஜ கூட்டணி கட்டாயத்தால் உருவாக்கப்பட்ட கூட்டணி என்பது எல்லாருக்கும் தெரியும். மிரட்டலால், உருட்டலால் உருவான பிளாக் மெயில் கூட்டணி.

உண்மையான அதிமுக தொண்டர்களின் விருப்பத்துக்கு எதிராக அமித் ஷாவால் திணிக்கப்பட்ட கூட்டணி. முழுக்க முழுக்க தங்களின் சுயலாபத்திற்காக, வழக்குகளில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள, பதவியை தக்க வைத்துக் கொள்ள இபிஎஸ் உருவாக்கின ரகசிய கூட்டணி.

டில்லிக்கு ரகசியமாக பல கார்களில் மாறி, மாறி போய் அங்கே வழக்குகளை காட்டி மிரட்டியதில், ஏசி காரிலேயே ஒருவருக்கு முகம் எல்லாம் வேர்த்து விறுவிறுத்து போனது. எப்படி கர்ச்சீப் வைத்து துடைத்துக் கொண்டு வந்தார் என்று நாடே பார்த்தது. அந்த காட்சியை நாமும் பார்த்தோம்.

பாஜ என்ன நினைக்கிறாங்க, திரும்பவும் நாங்க கண்ணசைக்கிற கண்ணை காட்டுகிற எடுபிடிகளை வைத்துக் கொண்டு டில்லியில் இருந்து தமிழகத்தை ஆளலாம் என்று பாஜ நினைக்கிறது.

பினாமி ஆட்சி

உங்களுக்கு தக்க பதிலடியை தமிழகம் தரும். அதிமுக ஆட்சி என்ற பெயரில் பாஜவின் பிராக்சி (Proxy) ஆட்சி என்று நடந்ததையே ஏற்றுக் கொள்ளாத மக்கள், தமிழக மக்கள். இப்போது வெளிப்படையாக, பாஜ அரசு என்றே சொல்லிக் கொண்டு வந்தால் உங்களை எங்களின் எல்லைக்குள்ளே அனுமதிக்க மாட்டோம்.

நடக்கப்போகிற தேர்தல் என்டிஏவுக்கும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இடையே கிடையாது. என்டிஏ Vs தமிழ்நாடு. மறந்தவிடாதீர்கள், தமிழ்நாடு என்றால்... தமிழக மக்களுக்காக உண்மையாக உழைக்கிற, நாடே திரும்பி பார்க்கிற செயல்திட்டங்களை செயல்படுத்துகிற தலைநிமிர்ந்து தன்மானத்தோடு போராகிற திமுகதான். எனவே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மீண்டும் வெற்றியை வழங்க மக்கள் தயாராகிவிட்டார்கள்.

நான் என்னைவிட அதிகம் நம்புவது தமிழக மக்களைத்தான். என் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களை நாம் தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். என்றைக்கும் எப்போதும் மக்கள் கூடவே இருக்க வேண்டும். இதுதான் உங்கள் சகோதரனான ஸ்டாலினின் வேண்டுகோள்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.






      Dinamalar
      Follow us