ஒரே நாளில் பயிர் கடன் வேண்டுமா? 'இ - சேவை' மையத்தில் விண்ணப்பிக்கலாம்
ஒரே நாளில் பயிர் கடன் வேண்டுமா? 'இ - சேவை' மையத்தில் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 19, 2025 06:38 AM
சென்னை: தர்மபுரியில் துவக்கப்பட்ட, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விண்ணப்பித்த அன்றே பயிர் கடன் வழங்கும் திட்டத்திற்கு, அரசு 'இ - சேவை' மையங்களில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், 4,473 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு பயிர் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால், குறித்த காலத்தில் கடன் கிடைப்பதில்லை என்ற புகார் உள்ளது. எனவே, பயிர் கடனுக்கு விண்ணப்பித்த அன்றே, விவசாயிகளின் வங்கி கணக்கில் கடன் தொகையை செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த, கூட்டுறவு துறை முடிவு செய்தது.
இத்திட்டத்தை, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 131 தொடக்க கூட்டுறவு சங்கங்களில், முதல்வர் ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர், அரசு இ - சேவை மையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
அதற்கு, 'ஆதார்' கட்டாயம். இ - சேவை மைய ஊழியர்கள், சங்கங்களின் பயிர் கடனுக்கான இணையதளத்தில் விண்ணப்பம் செய்யும் போது, சங்க அதிகாரிகள், 'டி.என்.கிரெய்ன்ஸ், தமிழ் நிலம்' இணையதளங்களில் இருந்து விவசாயிகளின் ஆவணங்களை பரிசீலித்து, அன்றே வங்கி கணக்கில் கடன் வழங்க நடவடிக்கை எடுப்பர்.
அரசு, இ - சேவை மையங்களில் பிறப்பு, இறப்பு, வருமான சான்று என, பல்வேறு சான்றுகள் வழங்கப்படுகின்றன. பல விவசாயிகளுக்கு கணினி இயக்கத் தெரியாது. அவர்கள், மற்றவர்கள் உதவியுடன் பயிர் கடனுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது, சரியாக பூர்த்தி செய்யப்படாத பட்சத்திலும், 'கடன் கிடைக்கவில்லை' என்று கூறுவர்.
இதை தவிர்க்கவே அரசு இ - சேவை மையத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.