சைபர் குற்றவாளிகளிடம் பணத்தை மீட்பதில் வேகம் வேண்டும்: டி.ஜி.பி.,
சைபர் குற்றவாளிகளிடம் பணத்தை மீட்பதில் வேகம் வேண்டும்: டி.ஜி.பி.,
ADDED : செப் 26, 2024 02:30 AM

சென்னை:''சைபர் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, அவர்களிடம் பொது மக்கள் இழந்த பணத்தை மீட்க வேண்டும்,'' என, போலீசாருக்கு டி.ஜி.பி., சங்கர் ஜிவால் அறிவுறுத்தினார்.
சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தில் நேற்று, மாநில சைபர் குற்றத் தடுப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் பயிற்சி வகுப்பு நடந்தது. அதில், டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பேசியதாவது:
புதுடில்லியில் செயல்படும் இந்திய சைபர் குற்றத் தடுப்பு பிரிவு ஒருங்கிணைப்பு மையம், 'ஆன்லைன்' மோசடி வழக்குகளை கையாளும் முறைகள் பற்றி வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளன. இவற்றை, தமிழக சைபர் குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் பின்பற்ற வேண்டும். அதேபோல, சைபர் குற்றங்கள் குறித்து, தமிழக தொலை தொடர்பு துறையும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
சைபர் குற்றத் தடுப்பு பிரிவு போலீசார், தகவல் தொழில்நுட்ப திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்; அவற்றில், 'அப்டேட்'டாக இருக்க வேண்டும். ஆன்லைன் வாயிலான பண மோசடி உள்ளிட்ட சைபர் குற்றங்கள் குறித்த வழக்குகளை மிகவும் விரைந்து விசாரிக்க வேண்டும்.
எந்த அளவுக்கு போலீசார் இதில் வேகமாக உள்ளனரோ, அந்த அளவுக்கு குற்றங்களை குறைக்க முடியும். அதற்கு போலீசார் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். சைபர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களிடம் பொது மக்கள் இழந்த பணத்தை மீட்க வேண்டும்.
சைபர் குற்றவாளிகளிடம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது பற்றி, தன்னார்வலர்களுடன் இணைந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சைபர் குற்றங்கள் குறித்து, 24 மணி நேரத்திற்குள், கட்டணமில்லா, '1930' என்ற எண்ணிலும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிப்பது பற்றி, மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.