ADDED : அக் 22, 2024 09:33 PM
சென்னை:தமிழக மின் வாரியம், வீடுகளுக்கு ஒரு முனை, மும்முனை பிரிவுகளில் மின் இணைப்பு வழங்குகிறது. அதற்கு ஏற்ப மீட்டர்கள் பொருத்தப்படுகின்றன.
இந்த மீட்டர்களை, 'டெண்டர்' வாயிலாக, தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின் வாரியம் கொள்முதல் செய்கிறது. சில மின் இணைப்புகளில் உள்ள மீட்டர்கள் சரியாக இயங்காமல் உள்ளன. இதனால், குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில், அதிக மின் கட்டணம் வருகிறது. இது, நுகர்வோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.
தற்போது, மாநிலம் முழுதும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான குறைபாடு உடைய மீட்டர்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதை அகற்றும் பணியில், பிரிவு அலுவலக ஊழியர்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, மின் ஊழியர்கள் கூறுகையில், 'குறைபாடு உடைய மீட்டர்களுக்கு பதிலாக புதிதாக பொருத்த, கிடங்குகளில் கேட்டால், 'மீட்டர் இல்லை, வந்ததும் வழங்கப்படும்' என்ற தகவல் வருகிறது. அதனால் தான், குறைபாடு உடைய மீட்டர்களை மாற்றுவதில் தாமதமாகிறது' என்றனர்.

