சொத்து வரி மதிப்பீட்டில் அலட்சியம்; உள்ளாட்சிகளுக்கு வருவாய் இழப்பு
சொத்து வரி மதிப்பீட்டில் அலட்சியம்; உள்ளாட்சிகளுக்கு வருவாய் இழப்பு
ADDED : ஜன 29, 2024 05:53 AM
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சிகளில், வீடுகள், வணிக நிறுவன கட்டடங்களுக்கான சொத்து வரியை மதிப்பிடுவதில், அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், வருவாய் இழப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில், வீடுகள், வணிக கட்டடங்களுக்கு சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. நகர்ப்புற பகுதிகளில், காலி மனைகளுக்கும் வரி விதிப்பு உண்டு. காலி மனை, கட்டட வரி எவ்வளவு என்பதை, உள்ளாட்சி அமைப்புகளே முடிவு செய்யும்.
ஆய்வு செய்யலாம்
இதற்காக, உள்ளாட்சிகளில் சொத்து வரி மதிப்பீட்டாளர்கள் உள்ளனர். பல இடங்களில் ஒரே நபர் சொத்து வரி மதிப்பீட்டாளராகவும், வசூல் அலுவலராகவும் இருப்பார். ஒவ்வொரு மாதமும் தங்கள் பகுதியில் யார் புதிய கட்டடம் கட்டினாலும், நேரில் சென்று சொத்து வரி மதிப்பிடுவது இவர்களின் பணி.
ஆனால், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில், இதற்கான பணியாளர்கள் தானாக முன்வந்து சொத்து வரி மதிப்பிடுவது இல்லை. பொதுமக்கள் விண்ணப்பித்தாலும், அலுவலர்கள் மதிப்பீட்டுக்கு வர, ஓராண்டு வரை ஆவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, ரியல்எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:
மாநகராட்சி, நகராட்சிகளில் புதிதாக கட்டட அனுமதி விபரங்கள், வருவாய் பிரிவுக்கு தரப்படுகின்றன. அதில், எந்தெந்த இடங்களில் கட்டடங்கள் வந்துள்ளன என்ற விபரத்தை அறியலாம். அதன்படி, சொத்து வரியை மதிப்பிட வேண்டும்; தேவைப்பட்டால், நேரில் ஆய்வு செய்யலாம்.
சுமை குறையும்
ஆனால், உள்ளாட்சிகளின் வருவாய் பிரிவு அலுவலர்கள், பொதுமக்கள் தாங்களாக விண்ணப்பிக்கும் வரை, இதில் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பொதுமக்கள் எப்போது விண்ணப்பித்தாலும், கட்டடம் கட்டப்பட்ட தேதியில் இருந்து சொத்து வரி விதிக்கின்றனர்.
உரிய காலத்தில் பணிகளை முடித்தால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக வருவாய் கிடைக்கும். பொது மக்களுக்கும் சொத்து வரி நிலுவை சுமையும் குறையும்.
சொத்து வரி மதிப்பு தாமதத்துக்கு அலுவலர்களை பொறுப்பாக்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் விதிகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சட்ட ரீதியாக ஆய்வு
நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மதிப்பீட்டில் ஏற்படும் தாமதத்துக்கு, உரிய அபராதம் மக்களிடம் வசூலிக்கப்படுகிறது. இதில், அலுவலரை பொறுப்பாக்கும் வகையில், விதிகளை மாற்றுவது குறித்து, சட்ட ரீதியாக ஆய்வு செய்து வருகிறோம்' என்றார்.