ADDED : டிச 03, 2024 12:22 AM

சென்னை,
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று டில்லி யில் மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
டில்லி சென்றுள்ள அமைச்சர் நேரு நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.
அப்போது, 'மத்திய அரசு கடந்த ஆண்டு ஜல்ஜீவன் இயக்கத்திற்கு ஒதுக்கீடு செய்த நிதியில், கடந்த ஆண்டு வரை வழங்க வேண்டிய நிலுவை தொகையையும், இந்த நிதி ஆண்டுக்கான தொகையையும் வழங்க வேண்டும். இத்திட்டத்தை, 2028ம் ஆண்டு வரை நீட்டிக்க வேண்டும்' எனக்கோரி மனு அளித்தார்.
அதன்பின், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர்லால் கட்டாரை சந்தித்து, 100 நகரங்கள் திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு, 15 நகரங்களை ஒதுக்கீடு செய்யக்கோரி மனு அளித்தார். தி.மு.க., - எம்.பி.,க்கள் கனிமொழி, ஆ.ராஜா, சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதேபோல, டில்லி சென்றுள்ள தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். தமிழக அரசின் வணிக வரித்துறை செயலர் பிஜேந்திர நவநீத், நிதித்துறை துணை செயலர் பிரத்தீக் தயாள் ஆகியோர் உடனிருந்தனர்.