முதல்வரோ, கவர்னரோ மற்றவர் அதிகாரங்களில் தலையிடக்கூடாது
முதல்வரோ, கவர்னரோ மற்றவர் அதிகாரங்களில் தலையிடக்கூடாது
ADDED : ஜூலை 12, 2025 01:55 AM

திருநெல்வேலி:''முதல்வரோ கவர்னரோ மற்றவர்களின் அதிகாரங்களில் தலையிடக்கூடாது,'' என, திருநெல்வேலியில் மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று காலை மஹாராஷ்டிரா கவர்னர் ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்தார். பின் திருநெல்வேலியிலுள்ள மாநில பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டிற்கு சென்றார். நடுக்கல்லூரில் கோயில் நிகழ்வில் அவர் பங்கேற்றார். பிறகு சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு அவர் மாலை அணிவித்தார்.
அவர் கூறியதாவது:
அழகுமுத்துகோன் தபால் தலையை வெளியிட்டு பிரதமர் மோடி சிறப்பு சேர்த்தார்கள். இந்திய மண்ணில் காவியை புகுத்த வேண்டிய அவசியமில்லை. காவி இந்த மண்ணுக்கு சொந்தமானது. எதை எடுத்தாலும் அரசியல் ஆக்கும் போக்கை கைவிட வேண்டும். நல்லதே போற்றப்பட வேண்டும்.
சமுதாயத்திற்கு ஊறு விளைவிப்பதை எதிர்க்க வேண்டும். நானும் இன்று காவி உடைதான் அணிந்திருக்கிறேன். காவி பற்றற்ற தன்மையை குறிக்கிறதே தவிர இயக்கங்களுக்கு சொந்தமானது அல்ல.
இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொருவருக்குமான அதிகாரத்தை வரையறுத்துள்ளது. முதல்வருக்கு மகத்தான அதிகாரங்கள் உள்ளன. அதிகாரங்களை முறையாக பயன்படுத்தினால் மாநில மக்களுக்கு எத்தனையோ நன்மைகளை செய்ய முடியும். கவர்னர்களுக்கு இருக்கும் ஒன்றிரண்டு அதிகாரங்களுக்குள் புகுந்து அது கூட இருக்கக் கூடாது என்ற நினைப்பது சிறந்த அணுகுமுறை அல்ல.
அரசியல் சாசனப்படி கவர்னர் தான் ஒரு மாநிலத்தின் முதல் குடிமகன் ஆவார். மதச்சார்பற்ற தன்மை என்பது யார் மனதும் புண்படாமல் செயல்படுவது தான். ஒருவர் மற்றவர் நம்பிக்கையை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் கவர்னருக்கு தான் உள்ளது என கேரள வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
நான் நான்கு மாநிலங்களில் கவர்னராக இருந்திருக்கிறேன். அவை காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி செய்யும் மாநிலங்களாகும். அங்கெல்லாம் இத்தகைய பிரச்னைகள் வரவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல்வருக்கு வானளாவிய அதிகாரம் வந்துடுமா. அப்படியானால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு தான் அதிக அதிகாரம் என எதேச்சையாக நடந்து கொள்ள முடியுமா.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

