நெல்லை ஆணவ கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றம்
நெல்லை ஆணவ கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றம்
ADDED : ஜூலை 31, 2025 12:32 AM
சென்னை:காதல் விவகாரத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த கவின் செல்வகணேஷ் கொலை வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ், கடந்த, 27ம் தேதி, திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, கவின் செல்வகணேஷின் தாய் கொடுத்த புகாரில், பாளையங்கோட்டை காவல் நிலைய போலீசார், கொலை மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், குற்றம்சாட்டப்பட்டுள்ள சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவரும், குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித் சகோதரியும் பழகி வந்த நிலையில், இது தொடர்பான பிரச்னையில், இந்த கொலை நடந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
குற்றம்சாட்டப்பட்ட சுர்ஜித், அதே நாளில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவர் நேற்று, குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை, தாய் ஆகியோர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையில், சிறப்பு எஸ்.ஐ.,க்களாக பணிபுரிந்து வருகின்றனர். விசாரணை பாரபட்சமற்றதாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருப்பதை உறுதி செய்யும் விதமாக, இருவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கின் தன்மை மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, சுதந்திரமான, நியாயமான, பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்தவற்காக, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.