பாட்டு பாட்டா இருக்கணும்; கண்டக்டர், டிரைவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
பாட்டு பாட்டா இருக்கணும்; கண்டக்டர், டிரைவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
ADDED : ஆக 16, 2024 12:42 PM

நெல்லை: பஸ்களில் சாதியப் பாடல்களை ஒலிபரப்பினால் சம்பந்தப்பட்ட டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று நெல்லை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சாதி மோதல்
தமிழகத்தில் சாதி மோதல்கள் அதிகம் காணப்படும் மாவட்டங்களில் ஒன்றாக நெல்லை இருந்து வருகிறது. சில ஆண்டுகளாக கல்லூரி முதல் பள்ளி மாணவர்கள் வரையிலும் சாதி மோதல்கள் நிலவி வருகின்றன. இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
சாதிப் பாடல்
இருப்பினும், ஆங்காங்கே இந்த சாதி வன்மம் இருந்து கொண்டேதான் உள்ளது. இந்த சூழலில், தான் பஸ்களில் சாதியப் பாடல்கள் ஒலிபரப்புவதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதனால், 2021ம் ஆண்டே, பஸ்களில் சாதியப் பாடல்களை ஒலிபரப்ப மாவட்ட போலீசார் தடை விதித்திருந்தனர்.
தடை விதிப்பு
ஆனால், அதன்பிறகும் சாதியப் பாடல்களை பஸ் பஸ்களில் தொடர்ந்து ஒலிபரப்பி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், நெல்லையில் இயக்கப்படும் மாநகரப் பஸ்களில் சாதிய ரீதியிலான பாடல்களை ஒலிபரப்பினால் சம்பந்தப்பட்ட டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நெல்லை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

