நெல்லை, விளவங்கோடு காங்., வேட்பாளர்கள் அறிவிப்பு: மயிலாடுதுறைக்கு 'மவுனம்'
நெல்லை, விளவங்கோடு காங்., வேட்பாளர்கள் அறிவிப்பு: மயிலாடுதுறைக்கு 'மவுனம்'
ADDED : மார் 25, 2024 04:44 PM

சென்னை: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று (மார்ச் 25) திருநெல்வேலி லோக்சபா தொகுதிக்கான வேட்பாளர் மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை லோக்சபா தொகுதிக்கு மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தமிழகத்தில் ஏப்.,19ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கி, 27ம் தேதி முடிவடைகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணியை ஆரம்பித்துவிட்டன. வேட்பாளர்களும் தங்கள் தொகுதிகளில் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரசுக்கு 9 தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதி (இடைத்தேர்தல்) ஒதுக்கப்பட்டிருந்தன. அதில் 7 லோக்சபா தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். திருநெல்வேலி, மயிலாடுதுறை தொகுதிகள் மற்றும் விளவங்கோடுக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், இன்று திருநெல்வேலி மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலியில் ராபர்ட் புருஸ், விளவங்கோடு தொகுதியில் தாரகை கத்பட் என்பவரும் போட்டியிடுகின்றனர்.
மயிலாடுதுறைக்கு மட்டும் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாளை மறுநாளுடன் வேட்புமனு தாக்கல் முடியவுள்ள நிலையில் இன்னும் வேட்பாளரையே அறிவிக்காமல் இருப்பதால், அந்த தொகுதியில் தேர்தல் பணியை துவக்குவதில் காங்கிரசார் முனைப்பு காட்டவில்லை.

