'3 ஆண்டுகளில் மருந்து துறையில் புதிதாத 50,000 வேலைவாய்ப்பு'
'3 ஆண்டுகளில் மருந்து துறையில் புதிதாத 50,000 வேலைவாய்ப்பு'
ADDED : செப் 21, 2024 02:37 AM
சென்னை:“தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில், மருந்து உற்பத்தி மற்றும் வினியோக துறையில், 50,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன,” என, மாநில மருந்து உரிமம் வழங்கல் மற்றும் அதிகார கட்டுப்பாட்டாளர் ஸ்ரீதர் பேசினார்.
மருந்து தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கான இரண்டு நாள் பயிலரங்கம், சென்னையில் நேற்று துவங்கியது. மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா சாஹு துவக்கி வைத்து பேசுகையில், “மருந்து தரக் கட்டுப்பாட்டு துறையில் நிலவி வரும் சவால்களுக்கு தீர்வு காண்பதற்கான பல்வேறு திட்டங்களை வகுக்க வேண்டும்,' என்றார்.
மருந்து கட்டுப்பாட்டாளர் ஸ்ரீதர் பேசியதாவது:
தமிழகத்தில், மருந்துகளின் தரம், செயல் திறன், பாதுகாப்பு மற்றும் அதற்கான வழிகாட்டுதல்கள் என, தரக் கட்டுப்பாடு தொடர்பான அனைத்து நடவடிக்கையையும், இணையவழியே மேற்கொண்டு வருகிறோம். இதன்படி, மருந்து உற்பத்தி, உரிமம் வழங்கல், புதுப்பித்தல் என 48,000 விண்ணப்பங்கள், இணைய வழியே பரிசீலிக்கப்பட்டு உள்ளன.
உலகளவில் முன்னணியில் உள்ள பைசர், அஸ்ட்ராஜெனிகா உள்ளிட்ட 40 மருந்து நிறுவனங்கள், தமிழகத்தில் உற்பத்தியை துவங்கியுள்ளன. இதன் வாயிலாக, மூன்று ஆண்டுகளில் 50,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.