ஒற்றை சாளர முறை கட்டட அனுமதிக்கு டி.டி.சி.பி.,யில் உருவாகிறது புதிய செயலி
ஒற்றை சாளர முறை கட்டட அனுமதிக்கு டி.டி.சி.பி.,யில் உருவாகிறது புதிய செயலி
ADDED : ஏப் 14, 2025 06:11 AM
சென்னை : 'சிங்கிள் விண்டோ சிஸ்டம்' எனப்படும், ஒற்றை சாளர முறையில், கட்டுமான திட்ட அனுமதி பெறும் பணிகளை எளிதாக்க, மொபைல் போன் செயலி உருவாக்கப்படும்' என, நகர் மற்றும் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கட்டுமான திட்டங்கள், மனைப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்கும் பணிகளை, 'ஆன்லைன்' முறைக்கு மாற்ற, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, ஒற்றை சாளர முறை, 2021ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆரம்பத்தில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வில், இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. இதன்பின், 2023ல் டி.டி.சி.பி.,யிலும், அதன்பின், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, டி.டி.சி.பி.,யில் இதுவரை, 15,015 மனைப்பிரிவு திட்டங்கள், 5,496 கட்டுமான திட்டங்களுக்கு, ஒற்றை சாளர முறையில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. வழக்கமாக, ஒரு விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்க, 180 நாட்கள் வரையான நிலையில், இந்த அவகாசம் தற்போது, 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒற்றை சாளர முறையை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, பல்வேறு புதிய வசதிகளை, ஒற்றை சாளர முறையில் சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில், கட்டுமான திட்ட அனுமதி பணிகளை எளிதாக்க, மொபைல் போன் செயலி உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டி.டி.சி.பி., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒற்றை சாளர முறையில், கட்டுமான அனுமதிக்கு விண்ணப்பிக்கும் பணிகளை, மின்னணு முறையில் எளிதாக்கும் வகையில், மொபைல் போன் செயலி இருக்கும்.
கட்டட அனுமதிக்கு விண்ணப்பிக்கும் பணிகளில், ஒவ்வொரு கட்டத்திலும் எழும் கேள்விகளுக்கு, 'சாட்பாட்' முறையில் விடை அளிக்கும் வகையில், இந்த வசதி இருக்கும்.
இதை பயன்படுத்தும் போது, கட்டுமான திட்ட அனுமதி விண்ணப்பங்கள், வரைபடங்களை பதிவேற்றம் செய்வதை எளிமைப்படுத்த, இது உதவும். இதற்கான தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆலோசனைப்படி, புதிய செயலி, அடுத்த நான்கு மாதங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

