அவசர சிகிச்சை பெறும் நோயாளிகளின் தரவுகளை சேகரிக்க புதிய செயலி
அவசர சிகிச்சை பெறும் நோயாளிகளின் தரவுகளை சேகரிக்க புதிய செயலி
ADDED : நவ 09, 2025 02:21 AM
சென்னை: விபத்து மற்றும் அவசர பிரிவு நோயாளிகளின் சிகிச்சை தரவுகளை சேகரிக்க, புதிய செயலியை, மக்கள் நல்வாழ்வுத் துறை அறிமுகம் செய்துள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில், பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, சென்னை பத்திரிகையாளர் மன்றம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமை, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மேலும், விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கான மொபைல் போன் செயலி ஒன்றையும் துவக்கி வைத்தனர்.
இதுகுறித்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழகத்தில், 36 மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், ஐந்து அரசு சார்ந்த மருத்துவமனைகள், 31 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 41 துணை மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள, விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களில், நவீன வசதிகளுடன், தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள் உள்ளன.
டி.ஏ.இ.ஐ., எனும் அவசர சிகிச்சை மையங்களில், சிகிச்சை பெறும் நோயாளிகளின் தரவுகளை சேகரிக்க, புதிதாக விபத்து மற்றும் அவசர சிகிச்சை செயலி வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இது, கணினி மற்றும் மொபைல் போனில் பயன்படுத்த கூடிய வகையில் இருக்கும்.
நோயாளிகளுக்கு, 108 ஆம்புலன்ஸ்களில் வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை முறைகள், இந்த செயலியில் இணைக்கப்பட்டுள்ளன.
நோயாளிகளின் தரவுகள் அடிப்படையில் சிகிச்சை தரத்தை மேம்படுத்த, இது வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

