சிறையில் இலங்கை கைதியை சந்திக்க குடும்பத்திற்கு அனுமதி
சிறையில் இலங்கை கைதியை சந்திக்க குடும்பத்திற்கு அனுமதி
ADDED : நவ 09, 2025 02:20 AM
சென்னை: 'புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இலங்கையை சேர்ந்த கைதியை, அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையை சேர்ந்தவர் புஷ்பராஜ், 44. இவர், கடந்த 2022ல் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டார். போதைப் பொருள் கடத்தல் வழக்கும், புஷ்பராஜ் மீது உள்ளது.
தற்போது, புழல் சிறையில் அடைக்கப்பட்ட புஷ்பராஜ், சிறையில் தன் குடும்ப உறுப்பினரை சந்திக்க அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
'தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, மனுதாரரை சந்திக்க, அவரது குடும்பத்தினருக்கு அனுமதி அளிக்க வேண்டும்' என, புழல் சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

