இறந்தவர்களின் பெயர்களை ரேஷன் கார்டிலிருந்து நீக்க புது முயற்சி
இறந்தவர்களின் பெயர்களை ரேஷன் கார்டிலிருந்து நீக்க புது முயற்சி
ADDED : நவ 20, 2025 01:18 AM
சென்னை: இறந்தவர்களின் பெயர்களை மருத்துவ துறையிடம் தகவல் பெற்று, ரேஷன் கார்டுகளில் நீக்கும் பணியை, உணவு வழங்கல் துறை மேற்கொண்டுள்ளது. இதனால், மாதந்தோறும் சராசரியாக, 40,000 பேர் பெயர்கள் நீக்கப்படுகின்றன.
தமிழகத்தில், தனி சமையல் அறையுடன் வசிப்பவருக்கு, 'ஆதார்' எண் அடிப்படையில், ரேஷன் கார்டு வழங்கப் படுகிறது.
ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை, இலவசமாகவும், சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு போன்றவை, மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன. இதற்காக, தமிழக அரசு ஆண்டுக்கு, 12,500 கோடி ரூபாய் செலவு செய்கிறது.
ரேஷன் கார்டில், பெயர் உள்ள நபர் இறந்து விட்டால், அவரது இறப்பு சான்றை, உணவு வழங்கல் துறையின், பொது வினியோக திட்ட இணையதளத்தில் சமர்ப்பித்து, பெயர் நீக்கம் செய்ய வேண்டும். ஆனால், பலர் இறந்தவர்களின் பெயரை கார்டில் இருந்து நீக்குவதில்லை.
இதனால், மருத்துவ துறையிடம் இருந்து, மாதந்தோறும் இறந்தவர் விபரங்களை பெற்று, ரேஷன் கார்டில் இருந்து, அவர்களின் பெயர்களை நீக்கும் பணியை, உணவு வழங்கல் துறையே மேற்கொண்டுள்ளது.
மாதம் சராசரியாக, 40,000 பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப் படுகின்றன.
ஒரே மாதிரியாக பெயர் உள்ள சிலரின் பெயரில் சந்தேகம் இருந்தால் மட்டும், சம்பந்தப்பட்ட உதவி ஆணையர் அல்லது வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு தகவல் தெரிவித்து, உரிய விசாரணைக்கு பின் நீக்கப்படுகிறது.
நடப்பாண்டில் இதுவரை, 1.83 லட்சம் ரேஷன் கார்டுகளில் இருந்து, 6.15 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, மாநிலம் முழுதும், 2.27 கோடி கார்டுகளில், 7 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

