இனி தத்காலில் டிக்கெட் கிடைக்க வாய்ப்பு ரயில் முன்பதிவு முறையில் புதிய மாற்றம்
இனி தத்காலில் டிக்கெட் கிடைக்க வாய்ப்பு ரயில் முன்பதிவு முறையில் புதிய மாற்றம்
ADDED : ஜூன் 11, 2025 11:33 PM
சென்னை:'தத்கால்' ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் செய்துள்ள புதிய மாற்றங்கள், ஜூலை 1 முதல் அமலுக்கு வர உள்ளன.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், 82 சதவீதம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.
அவசர கால ரயில் பயணங்களுக்கு உதவ, 'தத்கால் மற்றும் பிரீமியம் தத்கால்' முன்பதிவு வசதிகளை ரயில்வே வழங்குகிறது. மொத்த டிக்கெட்டுகளில், 30 சதவீதம், இந்த தத்கால் முறைக்கு ஒதுக்கப்படுகிறது.
கோரிக்கை
பெரும்பாலான ரயில்களில், தத்கால் முன்பதிவு துவங்கிய ஐந்து நிமிடத்துக்குள் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடுகின்றன. இதனால், பயணியர் ஏமாற்றமடைகின்றனர்.
மேலும், 'தத்கால் முன்பதிவு முறையில் முறைகேடு நடக்கிறது; அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறும் ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும்' என, பயணியர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் அடிப்படையில், முன்பதிவு செய்வதற்காக, தன் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள, 2.5 கோடி போலி முகவரிகளை கண்டறிந்து, அவற்றை ஐ.ஆர்.சி.டி.சி., நீக்கியது.
இதற்கிடையே, தத்கால் முன்பதிவு முறையில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும், உண்மையான பயணியர் டிக்கெட் பெற இது உதவும் என்றும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கடந்த 3ம் தேதி அறிவித்திருந்தார்.
அதன்படி, தத்கால் முன்பதிவு முறையில் புதிய மாற்றங்களை ரயில்வே வாரியம் செய்துள்ளது.
வரும் ஜூலை 1 முதல், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மற்றும் மொபைல் போன் செயலியில் தத்கால் முறையில், ஆதார் எண் வாயிலாக உறுதி செய்யப்பட்டவர்களால் மட்டும் முன்பதிவு செய்ய முடியும். மேலும், ஆதாருடன் ஓ.டி.பி., அடிப்படையிலான உறுதிப்பாடு கட்டாயமாக்கப்படுகிறது
அங்கீகாரம் பெற்ற முகவர்கள், பயனர், தங்கள் மொபைல் போனுக்கு அனுப்பப்படும் ஓ.டி.பி., எண்ணை உறுதிப்படுத்திய பின்பே, தத்கால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
ரயில்வேயில் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், தத்கால் டிக்கெட்டுகளை, அதன் திறப்பு நேரத்தில் இருந்து, முதல் 30 நிமிடங்களுக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அதன்படி, 'ஏசி' பெட்டிகளில், காலை 10:00 மணி முதல் 10:30 மணி வரை; ஸ்லீப்பர் பெட்டிகளுக்கு காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை, பொதுமக்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர்.
இந்த புதிய மாற்றங்களால், பொது மக்களுக்கு டிக்கெட் முன்பதிவு கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என, ரயில்வே தெரிவித்துள்ளது.
வரவேற்பு
இதுகுறித்து, ரயில் பயணியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தத்கால் முறையில் புதிய மாற்றங்கள் வரவேற்கத்தக்கது. இதனால், உண்மையான ரயில் பயணியர் பயனடைவர். முகவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய நேரக் கட்டுப்பாட்டை, ரயில்வே கண்காணிக்க வேண்டும்.
அதேபோல், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் அடிக்கடி ஏற்படும் 'சர்வர்' கோளாறுக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.