ADDED : செப் 22, 2024 01:20 AM

சென்னை:சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.வி.கங்காபுர்வாலா, மே 23ல் ஓய்வு பெற்றார். பின், பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் பெயரை, தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைத்தது.
அதேநேரத்தில், மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பெயரை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, கடந்த ஜூலையில் கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் இருந்த ஆர்.பூர்ணிமா, எம்.ஜோதிராமன், டாக்டர் மரியா கிளெட் ஆகியோர் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
புதிய தலைமை நீதிபதிக்கு கவர்னரும், கூடுதல் நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதியும் பதவி பிரமாணம் செய்து வைப்பர்.