புதிய தலைமை செயலக விவகாரம் அப்பீல் மனு தீர்ப்பு தள்ளிவைப்பு
புதிய தலைமை செயலக விவகாரம் அப்பீல் மனு தீர்ப்பு தள்ளிவைப்பு
ADDED : பிப் 06, 2024 11:25 PM
சென்னை:புதிய தலைமை செயலகம் கட்டுமானம் தொடர்பான புகாரில், மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற, அனுமதி கோரிய அரசின் மனு மீதான உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
தி.மு.க., ஆட்சியின் போது, சென்னை ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, புதிய தலைமை செயலகம் கட்டுமானத்தில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து விரிவான விசாரணை நடத்த, முந்தைய அ.தி.மு.க., அரசு அனுமதி அளித்தது.
அதை எதிர்த்து, ஸ்டாலின், துரைமுருகன் தொடர்ந்த வழக்கில், அரசு உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, முந்தைய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை வாபஸ் பெற, இப்போதைய அரசு முடிவு செய்துள்ளதாக, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில், தன்னையும் சேர்க்க கோரி, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., ஜெயவர்த்தன் மனுத் தாக்கல் செய்தார்.
மனு, நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அடங்கிய அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மூத்த வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிந்ததை தொடர்ந்து, மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரிய அரசின் மனு மீதான உத்தரவை, நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

