திருப்பரங்குன்றம் மலை மேல் செல்ல 20 நாளுக்கு பின் பக்தர்களுக்கு அனுமதி சந்தனக்கூடு விழாவிற்காக அனுமதிப்பதாக புது சர்ச்சை
திருப்பரங்குன்றம் மலை மேல் செல்ல 20 நாளுக்கு பின் பக்தர்களுக்கு அனுமதி சந்தனக்கூடு விழாவிற்காக அனுமதிப்பதாக புது சர்ச்சை
ADDED : டிச 23, 2025 04:27 AM

திருப்பரங்குன்றம்: மதுரை, திருப்பரங்குன்றம் மலைமேல் பக்தர்கள் செல்ல, 20 நாட்களுக்கு பின் போலீசார் நேற்று அனுமதி அளித்தனர். சந்தனக்கூடு விழாவிற்காக இஸ்லாமியர்களை மலைமேல் செல்ல அனுமதிப்பதற்காக, தற்போது அனைவரும் அனுமதிக்கப்படுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டினர்.
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றப்படாத பிரச்னையில், 20 நாட்களாக, திருப்பரங்குன்றம் முழுதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். டிச., 2 முதல் மலைக்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. டிச., 3ல் 144 தடை உத்தரவு அமலானது.
சில தினங்களுக்கு முன், மலையிலுள்ள கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு திருவிழாவிற்காக முன்னேற்பாடுகள் செய்ய, நான்கு இஸ்லாமியர்கள் மலைமேல் செல்ல போலீசார் அனுமதித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன், தர்கா நிர்வாகிகள் சந்தனக்கூடு விழாவிற்காக, மலைமேல் கொடியை கொண்டு சென்றனர்.
அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இந்நிலையில், 20 நாட்களுக்கு பின், நேற்று மதியம், 1:10 மணி முதல் அனைவரும் மலைமேல் செல்ல போலீசார் அனுமதித்தனர். இரும்பு தடுப்புகளை அகற்றினர்.
பக்தர்கள் கூறியதாவது:
நேற்று முன்தினம் இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு திருவிழாவிற்காக கொடியேற்றப்பட்டது.
ஜன., 6ல் சந்தனக்கூடு விழா நடக்கிறது. அதுவரை இஸ்லாமியர்கள் மலைமேல் தர்காவிற்கு செல்ல வேண்டும் என்பதற்காக தான், தற்போது அனைவரும் மலைக்கு செல்ல போலீ சார் அனுமதித்துள்ளனர்.
சந்தனக்கூடு திருவிழா இல்லையென்றால் அனுமதித்திருக்க மாட்டார்கள். இந்த அனுமதி ஜன., 7க்கு பின் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, மலைமேல் கொடியேற்ற இஸ்லாமியர்களுக்கு அனுமதி அளித்ததை கண்டித்து, மலை அடிவாரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். பின், அவர்களை விடுவிக்காததை கண்டித்து மறியல் நடந்தது.
இதில், 45 பேரை போலீசார் கைது செய்தனர். மறியலில் ஈடுபட்ட பா.ஜ., நிர்வாகிகள் உட்பட 45 பேர், போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட 17 பேர் என, 62 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

