பிஎச்.டி., மாணவர்களுக்கு ஓவிய பயிற்சி 'தாட்கோ' செயல்பாட்டால் புது சர்ச்சை
பிஎச்.டி., மாணவர்களுக்கு ஓவிய பயிற்சி 'தாட்கோ' செயல்பாட்டால் புது சர்ச்சை
ADDED : அக் 25, 2025 10:02 PM
சென்னை: ஆராய்ச்சி படிப்பான பிஎச்.டி., மாணவர்களுக்கு தாட்கோ சார்பில், ஓவிய பயிற்சி வழங்கப்படுவதற்கு, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகமான, 'தாட்கோ' சார்பில், எஸ்.சி., - எஸ்.டி., இளைஞர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இவற்றில் பெரும்பான்மை சென்னையை மையப்படுத்தி வழங்கப் படுவதால், பிற மாவட்டங்களில் உள்ள எஸ்.சி., - எஸ்.டி., பள்ளி, கல்லுாரி விடுதி மாணவர்களால் பயன் பெற முடியாத சூழல் நீடித்து வந்தது.
இந்நிலையில், தாட்கோ சார்பில், விடுதிக்கே சென்று மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் நடைமுறை கடந்த மாதம் துவங்கப்பட்டது. அதன்படி, ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்கு, தற்போது ஓவியம், வரைகலை உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதற்கு, அரசு கவின் கலைக் கல்லுாரியில் படித்த இளைஞர்கள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதன்படி, வாரம் ஒருமுறை மாணவர்களுக்கு, இரண்டு மணி நேரம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு, முதுகலை மற்றும் பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சி மாணவர்களுக்கு, இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் எதற்கு என, அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது குறித்து, பிஎச்.டி., மாணவர்கள் சிலர் கூறியதாவது:
தாட்கோ சார்பில் கடந்த ஒரு வாரமாக, தென் மாவட்டங்களில் உள்ள விடுதி மாணவர்களுக்கு, 'வாட்டர் கலர், ஸ்கெட்சிங், அக்ரிலிக் பெயின்டிங்' உள்ளிட்ட ஓவிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இது இளங்கலை மாணவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்.
பிஎச்.டி., மற்றும் முதுகலை மாணவர்களுக் கு, இதில் உடன்பாடு இல்லை. எனவே, அனைவருக்கும் பொதுவான பயிற்சி என்பதற்கு மாறாக, மாணவர்களின் கருத்தை கேட்டு, அவர்களின் விருப்பம் மற்றும் தொழில்நுட்ப தேவையின் அடிப்படையில் பயிற்சி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, தாட்கோ அதிகாரிகள் சிலர் கூறுகையில், 'ஓவிய பயிற்சியை பொறுத்தவரை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு கட்டாயம் இல்லை. விருப்பம் உள்ளவர்களை மட்டும் வகுப்பில் சேர்த்துக் கொள்ளுமாறு ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளோம்' என்றனர்.

