உச்சவரம்பு நிலங்கள் வரன்முறைக்கு புதிய காலவரம்பு விரைவில் அறிவிப்பு
உச்சவரம்பு நிலங்கள் வரன்முறைக்கு புதிய காலவரம்பு விரைவில் அறிவிப்பு
ADDED : டிச 28, 2024 12:40 AM

சென்னை: நில உச்சவரம்பு சட்டப்படி, மிகை நிலமாக வகைப்படுத்தப்பட்ட நிலங்களை வரன்முறைபடுத்த, புதிய காலவரம்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில், நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தை 1978ல் அமல்படுத்திய போது, 5,883 ஏக்கர் உபரி நிலமாக அரசுக்கு கிடைத்தது.
இந்த நிலத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து முறையாக பாதுகாக்க, வருவாய் துறை தவறியது.
அந்த நிலங்களை அதன் பழைய உரிமையாளர்கள், பல்வேறு நபர்களுக்கு விற்றனர். அவற்றை வாங்கியவர்கள், அதில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இந்நிலங்களுக்கு பட்டா மாற்றம் உள்ளிட்ட விஷயங்களுக்கு சென்றால், உச்சவரம்பு உபரி நிலம் என்று கூறி மறுக்கின்றனர்.
இதனால், வீடு கட்டி வசித்து வருவோர் பாதிக்கப்படுகின்றனர். இதை கருத்தில் வைத்து, உச்சவரம்பு உபரி நிலங்கள் வரன்முறை திட்டம், 2008ல் அறிவிக்கப்பட்டது.
கடந்த 1994 டிச., 31ம் தேதி நிலவரப்படி, தனியார் பெயரில் உள்ள பத்திர ஆதாரத்தை சமர்ப்பித்து கட்டணம் செலுத்தி வரன்முறை செய்து கொள்ளலாம்.
இதற்கு, 2008ல் அமலில் இருந்த, நில வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டன.
எனினும், 2010க்கு பின் இத்திட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது, புதிதாக அவகாசம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த 2008ல் அறிவிக்கப்பட்ட வரன்முறை திட்டத்தை மாற்றி அமைக்க, முடிவு செய்யப்பட்டது. இதில், தகுதிக்கான கால வரம்பில், 1994 டிச., 31ல் இருந்து, 2008 வரை சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
இந்நிலையில், தற்போதைய சூழலுக்கு ஏற்ப, புதிய கால வரம்பு தேதியை முடிவு செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, புதிய தேதி மற்றும் கட்டண விபரங்களை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன; விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

