வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு: டிச.16ல் மீண்டும் துவங்குகிறது கனமழை
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு: டிச.16ல் மீண்டும் துவங்குகிறது கனமழை
ADDED : டிச 14, 2024 06:17 AM

சென்னை: 'வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழகத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் டிச.16 முதல் மீண்டும் கனமழை துவங்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் அறிக்கை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று காலை 8:30 வரையிலான 24 மணி நேரத்தில் 29 இடங்களில் அதிகன மழையும், 81 இடங்களில் மிக கன மழையும், 168 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் அதிகபட்சமாக 54 செ.மீ., மழை பெய்துள்ளது. அதே மாவட்டம் அம்பாசமுத்திரம், துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 37 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கன்னடியன் அணைக்கட்டு, காக்காச்சியில் தலா 35 செ.மீ., மழையும், மாஞ்சோலையில் 32 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று நிலவரப்படி லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்கும்.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தில் அதே பகுதியில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது படிப்படியாக வலுவடைந்து மேற்கு, வடமேற்கில் நகர்ந்து, டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்களை நெருக்க வாய்ப்புள்ளது. இதனால் டிச.,16 முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை துவங்கக்கூடும்.
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீண்டும் கனமழை
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.