ADDED : டிச 07, 2024 07:34 PM
சென்னை:மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகள், அவர்களது உறவினர்களுடன், கணினி திரை வாயிலாக வீடியோ அழைப்பில் பேசும் நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை புழல், வேலுார், கோவை, திருச்சி, பாளையங்கோட்டை உட்பட ஒன்பது மத்திய சிறைகள் உள்ளன.
இவற்றில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், தங்கள் உறவினர்களுடன், கணினி திரை வாயிலாக, வீடியோ அழைப்பில் பேசும் நடைமுறை அமலாகி உள்ளது. இதற்காக, 126 கணினிகள், இந்த சிறைகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.
கைதிகள் மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடும்பத்தினருடன், 12 நிமிடம் மொபைல் போனில் வீடியோ அழைப்பில் பேசலாம். ஒரு நிமிடத்திற்கு, 2.25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கொரோனா தொற்று பரவிய நேரத்தில், கைதிகள் அவர்களின் உறவினர்களிடம் பேச, ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது, கம்ப்யூட்டர் மானிட்டரில் முகம் பார்த்து, வீடியோ அழைப்பில் பேசும் வசதி அமல்படுத்தப்பட்டு உள்ளது' என்றனர்.