சொத்து வழக்கு விபரம் அறிய வருவாய் துறையில் புதிய வசதி
சொத்து வழக்கு விபரம் அறிய வருவாய் துறையில் புதிய வசதி
ADDED : அக் 02, 2024 01:11 AM
சென்னை:வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர், அது தொடர்பாக நிலுவையில் உள்ள சிவில் வழக்கு விபரங்களை எளிதாக அறிய, வருவாய் துறை இணையதளத்தில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சொத்து தொடர்பான வழக்கு விபரங்கள், நீதிமன்ற தடை உத்தரவுகள் எதுவும், வில்லங்க சான்றில் சரிவர தெரிவதில்லை.
சொத்து உரிமை மாற்றம் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, சம்பந்தப்பட்டவர்கள் சார் - பதிவாளரிடம் தாக்கல் செய்தால் மட்டுமே, அது வில்லங்க சான்றில் சேர்க்கப்படும்.
தெரிவதில்லை
சொத்து தொடர்பாக எவ்வித உத்தரவும் இன்றி, வழக்குகள் நிலுவையில் இருப்பது குறித்தும், அதன் தற்போதைய நிலவரம் குறித்தும், பொதுமக்களுக்கு தெரிவதில்லை. இதனால், வழக்கு விபரம் தெரியாமல், மக்கள் சொத்துக்களை வாங்கி விடுகின்றனர்.
பத்திரப்பதிவுக்கு செல்லும்போது அல்லது பதிவு முடிந்த நிலையில், வழக்குகள் குறித்து தெரிய வந்தால், அதன் பாதிப்புகளை சரிசெய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, சொத்து தொடர்பான வழக்கு விபரம் அறிய, வருவாய் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பட்டா, 'அ' பதிவேடு, நில அளவை வரைபடம் உள்ளிட்ட விபரங்களை, 'ஆன்லைன்' முறையில் பொது மக்கள் பெற, இ - சேவை இணையதளத்தில் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதை, பொது மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நிலங்களின் அனைத்து வகை தகவல்களையும், ஒரே இணையதளத்தில் பெறும் வகையில் ஒருங்கிணைந்த தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை, www.clip.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மக்கள் பெறலாம்.
வழக்கு விபரம் தெரியும்
இந்த தளத்தில் பட்டா மேல்முறையீடு தொடர்பாக, வருவாய் நீதிமன்றங்களில் உள்ள நிலுவை வழக்குகள் குறித்து அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதில் கூடுதலாக, உரிமையியல் வழக்குகள் குறித்த விபரம் அறியும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.
இதற்காக, மாவட்ட நீதிமன்றங்களின், 'ஆன்லைன்' சேவை வசதி, வருவாய்த் துறையின் ஒருங்கிணைந்த இணையதளத்தில் சேர்க்கப்படும்.
தற்போது, வழக்கு பதிவு எண் அடிப்படையில் விபரம் அறியும் வசதி உள்ளது. இந்த வசதியை முழுமையாக மக்கள் பயன்படுத்தும் நிலை விரைவில் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.