'108 ஆம்புலன்ஸ்' இருப்பிடம் அறிய 'மேப்' இணைப்புடன் புதிய வசதி
'108 ஆம்புலன்ஸ்' இருப்பிடம் அறிய 'மேப்' இணைப்புடன் புதிய வசதி
ADDED : டிச 18, 2024 09:09 AM
சென்னை: தமிழகத்தில் '108 ஆம்புலன்ஸ்' சேவை, பயனாளிக்கு உரிய நேரத்தில் கிடைப்பதுடன், வாகன இருப்பிடத்தை அறியும் வகையில் வரைபட இணைப்புடன் கூடிய வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
தமிழக மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ், 'இ.எம்.ஆர்.ஐ., கிரீன் ஹெல்த் சர்வீஸ்' நிறுவனம், 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்தி வருகிறது.
தற்போது, சென்னையில் எட்டு நிமிடங்களிலும் மற்ற மாவட்டங்களில் 13 நிமிடங்கள் என்ற அளவில் 108 ஆம்புலன்ஸ் சேவை கிடைத்து வருகிறது. இந்த நிமிடங்களை மேலும் குறைக்கும் வகையில், வரைபடத்துடன் கூடிய இணைப்பு வசதியை, 108 ஆம்புலன்ஸ் சேவை ஏற்படுத்த உள்ளது.
'108 ஆம்புலன்ஸ்' சேவை மாநில தலைவர் செல்வகுமார்: ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்துவோர், வாகனத்தின் இருப்பிடத்தை அறிவதுடன்,தங்கள் இருப்பிடத்தையும்துல்லியமாக தெரிவிக்கும் வகையில், 'மேப்' உடன் கூடிய இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
ஒருவர் 108 சேவையை தொடர்பு கொண்டதும், அவரது அலைபேசி எண்ணுக்கு, ஓட்டுனர் தொடர்பு எண், வரைபட இணைப்புடன் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
பயனாளி தங்கள் இருப்பிட மேப்பை, அதில் பகிரும் வசதி ஏற்படுத்தப்படுவதால், ஆம்புலன்ஸ் விரைவாக சம்பவ இடத்தை அடைய உதவியாக இருக்கும். இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி பெற்று, தமிழக அரசின் ஒப்புதலுடன் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு கூறினார்.