தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய கூட்டமைப்பு தயார்
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய கூட்டமைப்பு தயார்
ADDED : டிச 10, 2025 06:03 AM

சென்னை: 'தமிழக அரசு ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்பது உட்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்த, 34 துறைகளின் சங்கங்கள் இணைந்து, 'அனைத்து துறை சங்கங்கள் கூட்டமைப்பு' ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, அதன் ஒருங்கிணைப்பாளரும், நில அளவைத்துறை அலுவலர் சங்கத் தலைவருமான வெ.மகேந்திர குமார், வருவாய் துறை அலுவலர் சங்கத் தலைவர் சிவகுமார் ஆகியோர் கூறியதாவது:
தமிழக அரசின், 34 துறைகளின் அலுவலர், பணியாளர் சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம், சமீபத்தில் நடந்தது. அரசு அலுவலர் ஒன்றிய, இணைப்பு சங்கங்கள், அரசு ஊழியர் சங்கத்தின் உறுப்பு சங்கங்கள் என, பல்வேறு சங்கங்கள் இந்த கூட்டமைப்பில் இணைந்துள்ளன.
சி.பி.எஸ்., எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கம் சார்பில், நாளை நடக்க உள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க, கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களில், கூட்டமைப்பு சார்பில் சங்கங்கள் பங்கேற்கும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டமைப்பு சார்பில், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

