புதிய சட்ட கல்லுாரி துவக்கப்படாது: அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்
புதிய சட்ட கல்லுாரி துவக்கப்படாது: அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்
ADDED : மார் 18, 2025 04:56 AM
சென்னை : “புதிய சட்டக்கல்லுாரி துவக்கும் திட்டம், தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,” என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - மகேந்திரன்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியில், சட்டக்கல்லுாரி துவக்கப்படுமா?
அமைச்சர் ரகுபதி: தற்போது, 15 அரசு சட்டக் கல்லுாரிகள், சீர்மிகு சட்டப்பள்ளி, திருச்சியில் தேசிய சட்டப்பல்கலை உள்ளது. போதிய மாணவர் சேர்க்கைக்கு வாய்ப்பு உள்ளது. புதிதாக ஒரு சட்டக்கல்லுாரி அமைக்க, 10 ஏக்கர் நிலம், கட்டடம் கட்ட 100 கோடி ரூபாய் தேவை.
தொடர் செலவினமாக ஆண்டுக்கு, 2.81 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. தொடராத செலவினமாக, 76.50 லட்சம் ரூபாய் தேவை. எனவே, தற்போது புதிதாக சட்டக்கல்லுாரி துவக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மகேந்திரன்: மடத்துகுளம் தொகுதியில், மாவட்ட குற்றவியல், உரிமையியல் நீதிமன்றம், தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்படுகிறது. இடம் பற்றாக்குறையால், மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, இடம் தேர்வு செய்து, புதிய நீதிமன்றம் கட்ட வேண்டும்.
அமைச்சர் ரகுபதி: புதிய கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட வேண்டும். மாவட்ட நீதிபதியிடம் இடத்தை காண்பித்து, அவர்கள் பரிந்துரை செய்தால், கட்டடம் கட்டுவது குறித்து பரிசீலிக்கப்படும்.
தி.மு.க., - கிரி: தண்டராம்பட்டு நீதிமன்றம், தற்போது வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் செயல்படுகிறது. இரண்டு இடம் காண்பிக்கப்பட்டுள்ளது. அங்கு கட்டடம் கட்ட வேண்டும்.
அமைச்சர் ரகுபதி: மாவட்ட நீதிபதி வாயிலாக இடம் தேர்வு செய்து, அரசுக்கு தெரியப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
வி.சி. - முகமது ஷா நவாஸ்: நாகப்பட்டினம் மாவட்டம், பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. அங்கு சட்டக்கல்லுாரி அமைக்க வேண்டும்.
அமைச்சர் ரகுபதி: முதல்வர் அனுமதி அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.