வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு வலுவடைய வாய்ப்பு: சில இடங்களில் இன்று மிதமான மழை
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு வலுவடைய வாய்ப்பு: சில இடங்களில் இன்று மிதமான மழை
ADDED : ஆக 18, 2025 06:30 AM

சென்னை: 'வங்கக்கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது இன்று மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 9 செ.மீ., மழை பெய்துஉள்ளது.
இதற்கு அடுத்ததாக, கோவை மாவட்டம் வால்பாறையில் 7; சோலையார், சின்கோனா, வால்பாறை தபால் அலுவலகம், உபாசி, நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் தலா, 5 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில், புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளது.
அதன்பின், இந்த காற்றழுத்த தாழ்வு, தெற்கு ஒடிஷா, வடக்கு ஆந்திரா இடையே நாளை மறுநாள் கரையை கடக்க வாய்ப்புள்ளது. அத்துடன் மேற்கு திசையில், காற்றின் வேக மாறுபாடு நிலவுகிறது.
அதனால், தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில், மணிக்கு, 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் பலத்த தரைக்காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 23ம் தேதி வரை மிதமான மழை தொடரலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒருசில இடங்களில், லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், மணிக்கு 40 முதல், 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே மணிக்கு 60 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

